tamilnadu

img

திமுகவில் இருந்து எம்எல்ஏ கு.க.செல்வம் இடைநீக்கம்... 

சென்னை
சென்னை ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதியின் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளராக உள்ளார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ-வும், சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் கொரோனாவால் காலமானதை அடுத்து அவர் வகித்த பொறுப்பு தனக்கு கிடைக்கும் என்ற முனைப்பில் கு.க.செல்வம்  இருந்தார். ஆனால் திமுக தலைமை சிற்றரசு என்பவரை சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக களமிறக்கியது. இதனால் அதிருப்தியில் இருந்த   கு.க.செல்வம் ஏற்கெனவே திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியுடன் இணைந்து பாஜக தேசிய தலைவரான ஜே.பி.நட்டாவை சந்தித்தார். 

இதனால் அவர் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜே.பி.நட்டாவை சந்தித்த பின்பு கு.க.செல்வம் செய்தியாளர்களிடம்,"நான் பாஜகவில் சேரவில்லை. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு மின் தூக்கி வேண்டும் இதற்காக தான் நான் பாஜக தலைவரை சந்தித்தேன். மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுலை கண்டிக்க வேண்டும். நான் இப்பொழுதும் திமுக எம்எல்ஏ-வாகவே இருக்கிறேன். ஜே.பி.நட்டாவை சந்தித்தற்கு திமுக தலைமை என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்"எனக் கூறினார்.   

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்தை சஸ்பெண்ட் செய்வதாகவும், திமுக தலைமை நிலைய செயலாளர், செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் செல்வம் விடுவிக்கப்பட்டுவதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.