சென்னை, ஏப். 15-சென்னை சேப்பாக்கத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் நள்ளிரவில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறையினரும் ஆங்காங்கே திடீர் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்எல்ஏக்கள் விடுதியில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் பதுக்கி வைத்துள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் விடுதிக்கு சென்ற தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். எம்எல்ஏ விடுதியின் ‘சி’ பிளாக் பகுதியில் 10-ஆவது மாடியில் உள்ள தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் அறை உள்பட பல்வேறு அறைகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அங்கிருந்து வெளியேறினர்.இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து விடிய விடிய காவல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஒப்பந்ததாரர் பி.எஸ்.கே.பெரியசாமி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், அதன் தொடர்ச்சியாகவே இரவும் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.