அதிரடியாக மூன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்யப்பட உள்ளதாக பரபரப்பான செய்திகள் வந்து கொண்டுள்ளன.அதிமுக சட்டமன்றக் கொறடா எஸ். ராஜேந்திரனின் கோரிக்கையை ஏற்று தமிழக சட்டப்பேரவைத்தலைவர் இம்மூன்று உறுப்பினர்களுக்கும் நோட்டீஸ் வழங்கியுள்ளார். இவ்வுறுப்பினர்கள் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டு.
நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 18ந் தேதி நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலோடு இரண்டு ஆண்டுகளாக நடத்தாமல் இருந்த 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் நடந்து முடிந்துள்ளன. மேலும் நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடும் போராட்டத்திற்கு பின்னர் மே 19ந் தேதி நடைபெறவுள்ளது. அனைத்து தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை மே 23 அன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், அவசர அவசரமாக மூன்று உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதன் நோக்கம் என்ன?
மைனாரிட்டி அரசு
முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடையும் போது அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 133 ஆக இருந்தது. ஆனால், தற்போது இவர்களுக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை வெகுவாக 114 என்ற அளவுக்கு குறைந்து ஆட்சியே ஊசலாடிக் கொண்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு கொடுத்தார்கள் என காரணம் காட்டி 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார். ஆனால் அதே சமயம், பாஜகவின் ஆதரவோடு ‘தர்மயுத்தம்’ நடத்திக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களித்தனர். ஆனால் அவர்களையும் தன்னோடு அரவணைத்துக் கொண்டு எடப்பாடி ஆட்சி நடத்தி வருகிறார். சட்டமன்றத்தில் கொறடாவின் உத்தரவை மீறி ஆட்சியை எதிர்த்து வாக்களித்த இந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களையும் சட்டப்படி தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், பிரதமர் மோடியின் கட்டப்பஞ்சாயத்து ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். கூட்டாட்சிக்கு வழிவகுத்துவிட்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற விசாரணை அனைத்தும் முடிந்து தீர்ப்பிற்காக காத்திருக்கிறது. இவர்கள் பதவி பறிக்கப்படும் பட்சத்தில் எடப்பாடி ஆட்சி அதோகதியாகிவிடும். அந்த ஆபத்திலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவே பாஜகவின் காலை பிடித்து தேர்தலில் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளார்கள். வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனுத்தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது மகனுடன் ஓடோடி சென்று ஆதரவு அளித்துள்ளதன் உள்நோக்கமும் இதுதான்.
தற்போது சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு 114 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் மூன்று உறுப்பினர்கள் அதிருப்தியாளர்களாக உள்ளார்கள். ஜனநாயக மனித நேய மக்கள்கட்சி தலைவர் தமீம்அன்சாரி அதிமுக - பாஜக உடன்பாட்டை எதிர்த்து பகிரங்கமாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவுஅளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் எடப்பாடி அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இன்னும் சில உறுப்பினர்கள் ஸ்லீப்பர் செல்களாக இருக்கக் கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆக மொத்தத்தில் குறைவான உறுப்பினர் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு மைனாரிட்டி அரசாக எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த குறைவான உறுப்பினர்களை வைத்துக் கொண்டு ஆட்சியை நீடிக்க வைப்பதற்கான ரசவாத வித்தையை அரங்கேற்றும் முயற்சியாகத்தான் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ்அளிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டியுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களை பேரவைத் தலைவர் நினைத்த மாத்திரத்தில் தகுதி நீக்கம் செய்வதற்கு சட்டம் இடம் அளிக்கவில்லை. சட்டமன்றத்திற்குள் சம்பந்தப்பட்ட கொறடாவின் உத்தரவினை மீறும்போதுதான் சட்டப்படி அவரை தகுதி நீக்கம் செய்ய முடியும். சட்டமன்றத்திற்கு வெளியே சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கட்டுப்பாட்டை மீறும் போது,கட்சியிலிருந்து வேண்டுமானால் அவரை நீக்க முடியுமே தவிர சட்டமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்வது சட்டத்திற்கு விரோதமானதாகும். உதாரணமாக, அதிமுகவின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பா அவர்களை ஜெயலலிதாவே கட்சியை விட்டு நீக்கினார். ஆனால், அவர் தற்போதும் கட்சி சாராத நாடாளுமன்ற உறுப்பினராக நீடித்து வருகிறார். அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஜெயலலிதா காலத்திலேயே தகுதி நீக்கம் செய்ய முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும். சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது அல்லது தகுதி நீக்கம் என மிரட்டி அவர்களை வளைத்துப் போடுவது பேரவைத் தலைவரின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டதாகும். எனவே, அதிமுக ஆட்சியை நீடிக்க வைப்பதற்காக பேரவைத் தலைவர் தனது அதிகார எல்லையைத் தாண்டி
செயல்படுவது சட்டமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாகும்.
22 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் எடப்பாடி அரசு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. ஏற்கனவே தேர்தல் முடிந்துள்ள 18 தொகுதிகளில் பெரும்பகுதியான இடங்களில் திமுக வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, மீதமுள்ள 4 தொகுதிகளையும் கைப்பற்ற எல்லா விதமான தில்லுமுல்லுகளையும் செய்வதற்கு எடப்பாடி அரசு முயற்சித்து வருகிறது. இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பேரவைத் தலைவரின் நடவடிக்கைகள் எப்படி அமையப் போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பேரவைத் தலைவரின் செயல்பாடுகள் நடுநிலைமை தவறியே இருந்துள்ளது என்பதை ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான பிரச்சனையில் அவர் மேற்கொண்ட அணுகுமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் நொறுங்கிக் கொண்டுள்ளன. அனுதினமும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டுள்ளன. விவசாயம், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், கைத்தறி, விசைத்தறி கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வேலையின்மை பல மடங்கு அதிகரித்துக் கொண்டுள்ளது. அனுதினமும் பாதிப்புக்குள்ளாகி வரும் மக்கள் பரிதவித்துக் கொண்டுள்ள நிலையில் இம்மக்கள் நலனில் கிஞ்சிற்றும் அக்கறையில்லாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் - முறைகேடு குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளதோடு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது மட்டுமின்றி அவர்களை வளைத்துப்போட்டு ஆட்சியை தக்க வைப்பதை மட்டுமே குறியாகக் கொண்டு எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய எடப்பாடி அரசை காத்திடும் நடவடிக்கைகள் எதையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.