tamilnadu

img

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டவுள்ள நிலையில், எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படலாம் என நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(29.07.2024) காலை 8 மணி நிலவரப்படி 116.360 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களில் 120 அடியை எட்டும் என்பதால், எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே காவிரி கரையோரம் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகள் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. நேற்று (28.07.24) பிற்பகலில் மேட்டூர் அணை நீர்மட்டம் 109.20 அடியாக உயர்ந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நேற்று(28.07.24) மாலை விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று இரவுக்குள்ளே மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.