tamilnadu

img

மெட்ரோ ஊழியர் போராட்டம்: முத்தரபு பேச்சுவார்த்தை தொடங்கியது

மெட்ரோ நிர்வாகம், தொழிற்சங்க நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த விவகாரத்தில் இன்று காலை முத்தரப்பு பேச்சுவார்த்தை துவங்கி நடைபெற்று வருகிறது. 

சென்னை கோயம்பேடு பகுதியில் சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் செயல்படுகிறது. இங்கு 248 நிரந்தரத் தொழிலாளர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இரவுநேர அலவன்ஸ், பிரசவகால விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதை கண்டித்து ஊழியர்கள் பலமுறை நிர்வாகத்திடம் முறையிட்டும் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு சிஐடியு தொழிற்சங்கத்தை அமைத்தனர். தொழிற்சங்கம் ஊழியர்களின் கோரிக்கையை தொழிலாளர் நலத் துறையில் முறையிட்டு அங்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் 8 பேரை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்தது தவறு, மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 8 பேரையும் பணி நீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் திங்களன்று (ஏப். 29) மதியம் 2 மணி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் குடும்பத்தினரும் நிர்வாகத்தின் முன் திரண்டனர்.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மெட்ரோ ரயில் என்பது சென்னையின் பெருமை. ஆனால் அந்த மெட்ரோ ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அபாயத்தை நிர்வாகம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. முறையான பயிற்சி இல்லாதவர்களை வைத்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒப்பந்த ஊழியர்கள் என்ற பெயரில் நிர்வாகம் ஊழியர்களை பணியமர்த்தி வருகிறது. மேலும் ஊழியர்களின் ஊதியத்தை நிர்வாகம் குறைத்தது. 35 விழுக்காடு அலவன்சை இனிமேல் இல்லை என அறிவித்து விட்டது நிர்வாகம். வேறு வழியில்லாமல் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை அமைத்தார்கள். தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கடிதங்களை நிர்வாகத்திடம் வழங்கினோம். தொழிலாளர் துறையில் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்து அதை வழக்காகவும் மாற்றினோம். 

இதற்கிடையே நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே கண்ட்ரோலர் பணியை தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் அளிக்க முயற்சித்தது. ரயில்வே கண்ட்ரோலர் பணி என்பது மிக முக்கியமானது பயணிகளின் பாதுகாப்போடு சம்பந்தப்பட்டது. எனவே தொழிற்சங்கம் சார்பில் நிர்வாகத்திற்கும், அந்த ஒப்பந்த நிறுவனத்திற்கும் ஒரு கடிதம் அனுப்பினோம். அதில் இது மெட்ரோ விதிக்கு விரோதமானதாகும். அதுமட்டுமல்லாமல் பயிற்சி முடித்து 50 பேர் தயார் நிலையில் உள்ளனர். நீதிமன்றமும் அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எனவே அந்த இடத்தில் ஒப்பந்த ஊழியர்களை நியமனம் செய்யக் கூடாது என குறிப்பிட்டிருந்தோம். இந்த கடிதம் எழுதியது மிகப் பெரிய குற்றம் எனக் கூறி 7 சங்க நிர்வாகிகளை பணி நீக்கம் செய்தது, தற்போது நிரந்தரமாக பணிநீக்கம் செய்து விட்டது நிர்வாகம். இதனால் பொது மேலாளரை சந்திக்க வேண்டும் என ஊழியர்கள் அவர் அறை அருகே உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மேலாளர் ஊழியர்களை சந்திக்க முடியாது என தெரிவித்து விட்டார். இதையடுத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தற்போது தொழிலாளர் துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காணலாம் என அழைப்பு விடுத்துள்ளார்கள். பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காணும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்றார்.

இதற்கிடையே தொழிலாளர்கள் வெளியே வரும் போது பிரேம்குமார், மனோகர் ஆகிய இரண்டு தொழிலாளர்களை ஜூனியர் மேலாளர் தடுத்து நிறுத்தி தாக்கி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக தொழிலாளர் நலத்துறை ஆணையம், மொட்ரோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மற்றும் மெட்ரோ நிர்வாகம் இடையே தற்போது முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.