சென்னை, ஜூன் 7-சென்னையில் உள்ள சிலகுறிப்பிட்ட மெட்ரோ ரயில்நிலையங்களில் மாதாந்திரபார்க்கிங் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. திருமங்கலம், அண்ணா நகர் கிழக்கு, அசோக் நகர்,கிண்டி, மண்ணடி, நங்கநல்லூர் சாலை மற்றும் மீனம்பாக்கம் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டும் தற்போது பார்க்கிங் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்த மாதாந்திர பார்க்கிங் கட்டணம் 250 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், விமான நிலையத்தில் உள்ள மெட்ரோ ரயில்நிலையத்தில் ஏற்கெனவே பார்க்கிங் கட்டணம் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.500, கார்களுக்கு ரூ.2000என கூடுதலாகவே இருந்தது. இந்நிலையில், இருசக்கர வாகனங்களுக்கு மாதாந்திர பார்க்கிங் கட்டணம் 500 ரூபாயிலிருந்து 1000ரூபாயாகவும், கார்களுக்கு மாதாந்திர பார்க்கிங் கட்டணம் 3 ஆயிரத்து 500ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் பகுதி வேகமாக நிரம்பிவிடுவதாக தெரிவிக்கும் அதிகாரிகள், தேவை அதிகரித்துள்ளதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், மாதாந்திர கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன நெரிசலை குறைக்கலாம். அதுமட்டுமல்லாது மாத கட்டணத்தை விட்டுவிட்டு விலை மலிவாக உள்ள தினசரி கட்டணத்தை மக்கள் பெற விரும்புவர் என்று கூறுயுள்ளனர். தினசரிகட்டணமாக வாகனத்தின் விதத்தை பொறுத்து ரூ.10 முதல் ரூ.40 வரை வசூலிக்கப்படுகிறது. பார்க்கிங் கட்டணம் மூலம் சென்னை மெட்ரோ நிர்வாகத்திற்கு சுமார் ரூ.1.9 லட்சம் வருவாய் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.