சென்னை, மே 5-சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பயணிகள், பொது மக்கள் வசதிக்காக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது.500 லிட்டர் கொள்ளளவு கொண்ட நவீன சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் நிலையம் சனிக்கிழமையன்று (மே 4) துவக்கிவைக்கப்பட்டது. இந்த இலவச குடிநீர் வசதியால் மெட்ரோ ரயில் நிலையம், பூங்கா ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், சென்ட்ரல் பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு வரும் பயணிகள், பொது மக்கள் பயனடைவார்கள்.இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி கூறுகையில், ‘ சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் முதல் தடவையாக இலவச குடிநீர் வசதி தொடங்கி உள்ளோம். இதேபோல மேலும் ஒருசில மெட்ரோ ரயில் நிலையங்களில் விரைவில் குடிநீர் வசதி தொடங்கப்படும்’ என்றார்.