மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக் கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்றுஇடங்களை அரசு மருத்துவர்கள் கைப்பற்றினர். சென்னையில் திங்களன்று (ஏப். 1) இதற்கான கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்புகளுக்கு 1,758 இடங்கள் உள்ளன. இதில்879 இடங்கள் (50 சதவீதம்)அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 879 இடங்கள் மற்றும்தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான235 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் மாநில அரசுக்கு எம்டிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும்தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களை நீட்தேர்வில் தகுதி பெற்றவர்களை கொண்டு மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கு எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த 13-ம் தேதிதொடங்கி 20-ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் நீட் தேர்வில் தகுதிபெற்ற எம்பிபிஎஸ், பிடிஎஸ் முடித்த டாக்டர்கள் விண்ணப்பித்தனர்.
அரசு டாக்டர்களுக்கு மட்டும் நீட் மதிப்பெண்ணுடன் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. விண்ணப்பப் பரிசீலனைக்கு பின்னர், மருத்துவப் பட்டமேற்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் றறற.வnhநயடவா.டிசப என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 6,188 பேர் இடம்பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைஅரசு மருத்துவர்களான சி.ஆர்.அருண்குமார், வி.தமிழரசு, ஹேம்நாத்குமார் ஆகியோர் பிடித்துள்ளனர். தரவரிசைப் பட்டியலில் அரசு டாக்டர்கள்அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர். அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்டிஎஸ்இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 669 பேர் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 2,428 பேரும் மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 364 பேரும் உள்ளனர்.எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் பட்டமேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்களன்று (ஏப். 1 ) சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் தொடங்குகிறது. இந்தக் கலந்தாய்வு வரும் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.