கடலூர், ஏப்.22-விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சி.கீரனூர்கிராமத்தைச் சேர்ந்த ராஜவேலு மகன் சத்தியமூர்த்தி (35) என்பவருக்கும், விருத்தாசலம் காந்தி நகரில் வசிக்கும் 16 வயது நிரம்பிய சிறுமிக்கும், திருமணம் செய்ய இருவீட்டாரும், நிச்சயம் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, இருவருக்கும், விருத்தாசலம் கருவேப்பிலங் குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திருமணத்திற்கான ஆயத்தப் பணிகளில் இரு வீட்டாரும் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், மணப்பெண்ணிற்கு திருமணவயது இல்லை என்ற தகவலறிந்த, கடலூர் குழந்தைகள் உதவி மைய அலுவலர்கள் முகுந்தன், பார்த்திபன் மற்றும் விருத்தாசலம் காவல்துறையினர் அந்த திருமண மண்டபத்திற்கு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் மணப்பெண் திருமண வயதை அடையாத (மைனர்)என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்தி மணப்பெண்ணை அழைத்துச் சென்று குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், திருமணம் தடுத்துநிறுத்தப்பட்டது திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மண்டபத்தை காலி செய்துவிட்டு சென்றனர். அதைத் தொடர்ந்து நேற்று காலையில் திருமணம் நடைபெறும் என நினைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறவினர்கள் மண்டபத்திற்கு வருகை தந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.