tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

திருமண தகவல் மையம்  வைத்து பெண்களை ஏமாற்றியவர் கைது

விழுப்புரம்,டிச.11- ஆன்லைனில் திருமண தகவல் மையம்  அமைத்து பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த  இளைஞரை போலீசார் கைது செய்தனர். மைலம் அருகே சிங்கனூரை சேர்ந்த பெண் ஒருவர் பாரத் திருமண தகவல் மையத்தில் வரன் தேடியதில் பாரத் திருமண தகவல் மையத்தின் உரிமையாளர் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சென்னீர்குப்பம், ஜெ.ஜெ. நகரை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் அருண் மொழி (36) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 17 சவரன் நகை, பணம் ரூ.25 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனம்1, ஆப்பிள் மொபைல் போன் ஆகியவற்றை சிறுக, சிறுக வாங்கிகொண்டு தன்னை ஏமாற்றியதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் கொடுத்த புகாரின் பேரில்  திருமண தகவல் மையம் உரிமையாளரான  அருண்மொழி என்பவரை புதனன்று கைது செய்து விசாரணை செய்தனர் .இது போல போலியாக விடோ திருமண தகவல் மையம் உருவாக்கி தனது பயோ டேட்டாவை டாக்டர், டீச்சர், அரசாங்க அதிகாரி என்று பல பெண்களிடம் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்தது தெரியவந்தது. எனவே அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில் புதனன்று  திண்டிவனம் பேருந்து நிறுத்தம் அருகில் நின்றிருந்த அருண்மொழியை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்து  நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

விற்பனைக்காக குட்கா பதுக்கிய பெண் கைது

விழுப்புரம், டிச.11- செஞ்சி அருகே குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலம்பூண்டி கிராமத்தில் குட்கா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவலர்கள் அப்பகுதிகளில் சென்று சோதனை மேற்கொண்டனர். ஆலம்பூண்டி மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜா என்பவரின் மனைவி மாலதி வயது (41) என்பவர் வீட்டின் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ்-285 பாக்கெட், விமல் -1260 பாக்கெட், கூல் நிப்-195 பாக்கெட், டி1.   -2160 பாக்கெட் என  சுமார் 17 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.