பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட பாஜக உறுப்பினர் எஸ்வி சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
ஊடகங்களில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான கருத்தை பாஜக பிரமுகர் எஸ்.வி சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எஸ்.வி.சேகர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி நிஷாபானு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது
அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில், "அந்தப் பதிவை அவர் படிக்காமல் பிறருக்குப் பகிர்ந்துள்ளார். அதற்கு மன்னிப்பும் கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி நிஷாபானு, "படிக்காமல் ஏன் பகிர்தீர்கள் அவ்வாறு செய்துவிட்டு, மன்னிப்புக் கேட்டால் சரியாகி விடுமா? என்று கேள்வி எழுப்பினார்.
மனுதாரர் தரப்பில் வழக்கை ரத்து செய்யுமாறு கோரப்பட்டது. அதற்கு வழக்கை ரத்து செய்ய முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி, விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.