முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் ரூ 3 கோடி வரை பெற்றுள்ளார். மேலும் வேலையும் வாங்கி தராமலும், பெற்ற பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றியதாக ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் குற்றம் சாட்டினர். அதன்பிறகு விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் புகார் அளித்ததின் பேரில் ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி முதல் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் காவல்துறையினர் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் காவல்துறையினர் பிறப்பித்துள்ளது. அந்த வகையில் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்கும் விதமாக, விமான நிலையங்களுக்கு காவல்துறை தரப்பில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.