திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் சிபிஎம், சிபிஐ கட்சிகள் போட்டியிடும் மக்களவை தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு கடந்த வாரம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து முதலில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை கூட்டத்தின் முடிவில், மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் இடையே கையெழுத்தானது.
இதனை தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தின் முடிவில், நாகை மற்றும் திருப்பூர் ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் மத்தரசன் ஆகியோர் இடையே கையெழுத்தானது.