சென்னை,மே 25-தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள்பெற்ற வாக்குகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன.தமிழகத்தில் வேலூர் தவிர 38 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல்நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் தேனி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றது.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் (விடுதலைச் சிறுத்தை கட்சி போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியைத் தவிர), அதிமுக. கூட்டணிக் கட்சிகளை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்திவெற்றி பெற்றுள்ளன.சிதம்பரத்தில் தி.மு.க. கூட்டணிக்கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, 3,219 ஓட்டு வித்தியாசத்தில் அதிமுகவை வீழ்த்தியது. இது குறைந்தபட்ச வித்தியாசமாகும். அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சியான பாமகவை தி.மு.க வேட்பாளர் 5லட்சத்து 38 ஆயிரத்து 972 ஓட்டுக்கள்வித்தியாசத்தில் தோற்கடித்தார்.இந்தத் தேர்தலில் தி.மு.க. அதிகபட்சமாக 7 லட்சத்தைத் தாண்டியும், குறைந்தபட்சமாக 4 லட்சத்துக்கு மேலாகவும் ஓட்டுகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில் திருப்பெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு 7 லட்சத்து 93 ஆயிரத்து 281 ஓட்டுகளைப் பெற்றுள்ளார்.குறைந்தபட்சமாக தேனியில் 4 லட்சத்து 28 ஆயிரத்து 120 ஓட்டுகளை திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்பெற்றது.தேனியில் அ.தி.மு.க. 5 லட்சத்து 4 ஆயிரத்து 813 ஓட்டுக்களையும், குறைந்தபட்சமாக திருச்சியில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 999 ஓட்டுக்களை அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான தேமுதிகவும் பெற்றிருக்கிறது.
அதிமுக வாக்குகள் சரிவு
தமிழகத்தில் மொத்தமுள்ள 5.98 கோடி வாக்காளர்களில் 4 கோடியே23 லட்சத்து 66 ஆயிரத்து 721 வாக்காளர்கள் வாக்களித்தனர். அவற்றில் தி.மு.க. கூட்டணி, 2 கோடியே 23 லட்சத்து 3 ஆயிரத்து 310 ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. இதன் சதவீதம் 52.64 ஆகும். அ.தி.மு.க. கூட்டணி, ஒருகோடியே 28 லட்சத்து 30 ஆயிரத்து 314 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளது. இதன் சதவீதம் 30.28 ஆகும்.தி.மு.க. மட்டும் 32.76 சதவீத ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. தி.மு.க.கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் 12.76 சதவீத ஓட்டுக்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2.40 சதவீதம், இந்திய கம்யூனிஸ்டு 2.43,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1.11 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றுள்ளன. (விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒரு வேட்பாளர் மற்றும் ம.தி.மு.க.ஐ.ஜே.கே., கொங்கு மக்கள் தேசியக்கட்சி வேட்பாளர்கள், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். இந்தக் கட்சிகளுக்கான ஓட்டு சதவீதம் பிரித்துக் காட்டப்படவில்லை. ஆனாலும் 1.19 சதவீத ஓட்டுக்களை தி.மு.க. கூட்டணிக்கு இந்தக்கட்சிகள் அளித்ததாக கணக்கிடப்படுகிறது).
அதிமுக கூட்டணி கட்சிகளின் வாக்குகளும் சரிந்தது
அ.தி.மு.க. மட்டும் 18.48 சதவீத ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. அதன்கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க. 3.66சதவீதம், தே.மு.தி.க. 2.19, பா.ம.க. 5.42சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றுள்ளன. (புதிய தமிழகம், தமிழ் மாநிலகாங்கிரஸ் போன்ற சில கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டனர். இந்த கட்சிகளுக்கான ஓட்டு விழுக்காடு பிரித்து காட்டப்படவில்லை. ஆனாலும் 0.53 சதவீத வாக்குகளை இந்தக் கட்சிகள் பெற்றன).
அமமுகவுக்கு 5.25 விழுக்காடு வாக்கு
இந்தத் தேர்தலில் அ.ம.மு.க. கட்சியின் பலம் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டது. அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதத்தை அதிக அளவில் அ.ம.மு.க. பெற்றிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. பெரிய கட்சிகளுக்கு இணையாக பேசப்பட்ட இந்தக் கட்சி, தமிழகம் முழுவதுமே 22 லட்சத்து 25 ஆயிரத்து 377 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இது 5.25 விழுக்காடாகும்.தேனியில் அதிகபட்சமாக அ.ம.மு.க. ஒரு லட்சத்து 44 ஆயிரத்து50 ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 8,867 ஓட்டுக்களை மட்டுமே அந்தக்கட்சி பெற்றுள்ளது. முதன் முறையாகதேர்தலில் குதித்து தமிழகம் முழுவதும்15 லட்சத்து 75 ஆயிரத்து 620 ஓட்டுக்களை மக்கள் நீதி மய்யம் பெற்றிருக்கிறது. இதன் சதவீதம் 3.72 ஆகும்.நாம் தமிழர் கட்சிக்கு 16 லட்சத்து 45ஆயிரத்து 185 வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் விழுக்காடு 3.88 ஆகும்.