tamilnadu

img

சென்னை புழல் சிறை தடுப்பு முகாமிலிருந்து வெளிநாட்டு முஸ்லிம்களை விடுவித்திடுக.... முதலமைச்சருக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தல்

சென்னை:
சென்னை புழல் சிறை தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு முஸ்லிம்களை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு சிறுபான்மைமக்கள் நலக்குழு சார்பாக மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிறுபான்மை மக்கள்நலக்குழு மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, மாநில பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

2020 ஆம் ஆண்டு துவக்கத்தில் இந்தியாவிற்கு ஆன்மீக சுற்றுலா வந்த 9 நாடுகளைச் சேர்ந்த 12 பெண்கள் உட்பட 129 முஸ்லிம்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் முடிந்து திரும்புகிற நேரத்தில் தமிழக அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகு  தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த வெளிநாட்டு முஸ்லிம்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.இவர்கள் ஆன்மீக சுற்றுலாவை முடித்து திரும்புகிற நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது .அதனால் அவர்கள் பயணம் தடைபட்டு ஆங்காங்கே தங்கவேண்டிய நிலைஏற்பட்டவர்களை தமிழக காவல்துறைகைது செய்து பல்வேறு சிறைச்சாலை களில் அடைத்து வைத்திருந்தனர். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கீழமை நீதிமன்றங்கள் மற்றும் சென்னை, மதுரை உட்பட உயர்நீதிமன்றமும் இதுசம்பந்தமான வழக்கை விசாரித்து அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளது.  ஒருவேளை அவர்கள்பயணத்திற்கான விசாவில் தவறு இருந்தால் கூட அதற்கான தண்டனையை அவர்கள் பெற்று விட்டார்கள் என்றுஉயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்து, அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய ஆணையிட்ட பிறகும் தமிழ்நாடுஅரசாங்கம் அவர்களை சிறையிலிருந்து விடுவித்து திடீரென தடுப்பு முகாமில்அடைத்து வைத்துள்ளனர். இந்தியா வில் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வாறுகைது செய்யப்பட்டவர்கள் தடுப்புமுகாம்களில் அடைத்து வைக்கப்பட வில்லை. தமிழ்நாட்டில் மட்டும் இதுபோன்று தடுப்பு முகாமில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வது எந்த விதத்திலும் நியாயமில்லை.

பொதுவாக தமிழ் பண்பாடு, வந்தாரை வரவேற்று விருந்தோம்பி வழியனுப்பும் மிக உயரிய பண்பாடாகும். ஆனால் இதற்கு மாறாக இன்றைக்கு நீதிமன்ற விடுதலைக்குப் பிறகும் வெளிநாட்டு முஸ்லிம்கள் எந்தவித காரணமுமின்றி அதுவும் தடுப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பது மனித உரிமை மீறிய செயலாகவும் கருதவேண்டி இருக்கிறது.எனவே தமிழக அரசு இவர்கள் அனைவரையும் தடுப்பு முகாமில் இருந்து விடுவித்து, அவர்கள் விரும்புகிற இடத்தில் தங்க வைத்து, அவர்களுடைய உணவு முறைக்கு அவருடைய வாழ்க்கை முறைக்கு அவர்களை அனுமதிக்க வேண்டும். பல மாதங்களாக தங்கள் குடும்பத்தார், குழந்தைகளை விட்டு அவதியுறும் இவர்களை  சொந்த நாடுகளுக்கு  திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.