tamilnadu

img

காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்: ஸ்டாலின்

சென்னை:
காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகததில் அடுத்தடுத்து கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஊரடங்கு காலத்தில் கூட அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறை முழுவதும் அரசியல்மயமாக்கப் பட்டிருக்கிறது. உளவுத்துறையினர், நடைபெறப் போகும் சட்டவிரோத காரியங்கள், ரவுடிகளின் நடமாட்டங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து தகவல் கொடுப்பதை அறவே கைவிட்டு விட்டுள்ளனர். இவர்கள் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் என்ன செய்கிறார்கள் என்பதை மட்டுமே உளவு பார்ப்பது என்ற நிலையை அதிமுக உருவாக்கி விட்டது.

அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் சொல்வதைக் கேட்டால் போதும் என்ற நிலைக்கு காவல்துறையினர் தள்ளப்பட்டுள்ளனர். கீழ்மட்ட மாறுதல்களில் கூட மாவட்ட எஸ்பி அல்லது டிஜிபிக்கு அதிகாரம் இல்லாமல் உள்ளது. எஸ்பி., டிஐஜி., மண்டல ஐஜி ஆகியோரை “பரிந்துரை” செய்யும் டிஜிபி-யின் அதிகாரம் தேர்தல் பொறுப்பாளர்களாக அதிமுக நியமித்துள்ள அமைச்சர்களிடம் சென்று விட்டது.காவல்துறை முற்றிலும் சீர்குலைக்கப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கா? அது கிலோ என்ன விலை என்ற நிலையை அதிமுக ஆட்சி ஏற்படுத்திவிட்டது. ஆகவே, மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் காவல் துறையை ஈடுபடுத்தும் வேலையை சட்டம் - ஒழுங்கு காவல்துறைத் தலைவரும், தலைமைச் செயலாளரும் செய்ய வேண்டும்.காவல்துறை சீர்திருத்தம் குறித்து “பிரகாஷ் சிங்” வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் ஆகியவற்றின் துணைகொண்டு, தமிழகக் காவல்துறையின் மாண்பினை உயர்த்தி  மதிப்புமிக்கதாக மாற்ற வேண்டும். அதிமுக-வினரின் குறுக்கீடுகள் இன்றி காவல்துறையைச் சுதந்திரமாகச் செயல்பட விட வேண்டும் என்று கூறியுள்ளார்.

கோவில்கள் சேதம் - கண்டனம்
கோவையில் ஜூலை 18 அன்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப் பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சனைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாத வண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.