மன்னர் ஆட்சியில் நிலப்பறிப்பு
சமீபத்தில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் இராஜராஜ சோழன் ஆட்சி குறித்து தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகியுள்ளது. அவரது கருத்து ஏற்கத்தக்க ஒன்று தான். அதே நேரத்தில் தலித்துக்கள் என்று மட்டுமல்லாமல் அனைத்து ஏழை எளிய மக்களின் நிலங்களும் பறிக்கப்பட்டன. பொதுவாக தஞ்சையை ஆண்ட மன்னர்கள் தங்கள் ஆட்சியில் விவசாய மேம்பாடு, பாசன திட்டங்கள், நீர்வள பாதுகாப்பு போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து ஆட்சி புரிந்துள்ளனர். கரிகால் சோழன் கட்டிய கல்லணையை இன்றும் நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். இதுபோன்ற நல்ல நடவடிக்கைகள் இருந்தாலும் உழைக்கும் மக்களின் மீது 36 வகையான வரிகள் இருந்துள்ளன. ஆடு, மாடு, கோழி என அனைத்திற்கும் வரி இருந்துள்ளது.
கன்னியாகுமரியில் மார்பக வரி என்ற வரி விதிக்கப்பட்டது. மக்கள் இவற்றை எதிர்த்து போராடாமல் இருக்க நிறைய கோவில் குளங்களைக் கட்டி மக்களிடத்தில் தெய்வ நம்பிக்கையை ஊட்டி ஏழை, பணக்காரன், ஏற்றத்தாழ்வு எல்லாம் இறைவனால் விதிக்கப்பட்டது என்று போதித்தார்கள். சோழ மன்னர்களின் ஆட்சிகாலத்தில் ஏராளமானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அன்றைய ஆட்சிக் காலம் என்பது ஒரு நில உடமை ஆட்சியாக இருந்ததால் எல்லா மக்களிடமிருந்தும் நிலங்கள் பறிக்கப்பட்டு கோவில்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. உலகத்தில் எங்கும் இல்லாத கட்டமைப்பு மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்துள்ளது. எனவே மன்னர்கள் ஆட்சி குறித்து வரலாற்று ரீதியில் விமர்சனங்கள் நிறையவே உள்ளன என்று கூறினார்.