குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், ராமநாதபுரம் அடுத்த தென்னவனூர் பகுதியை சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 53 உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 11 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்; தமிழநாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.