வண்ணாரப்பேட்டையில் பிருந்தாகாரத் பேச்சு
சென்னை,டிச.20- குடியுரிமை திருத்தச்சட்ட விஷயத்தில் மோடி, அமித்ஷா பாதையில் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயணிப்பது வெட்கக் கேடானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் சாடினார். இச் சட்டத்திற்கு எதிரான வண்ணாரப் பேட்டையில் 7வது நாளாகப் போராட்டம் நடத்தி வரும் மக்களைக் குறிப்பாகப் பெண்களை வியாழனன்று (பிப்.20) அவர் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர்கள் மத்தியில் பிருந்தா காரத் பேசியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து இந்தப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சட்டத்திருத்தம் மூலமாக இந்தியாவை மத ரீதியாகப் பிளக்கும் ஆபத்தான விளையாட்டில் அமித்ஷாவும் மோடியும் இறங்கியுள்ளனர்.
மத்திய அரசின் இந்த மோசமான சட்டத் திருத்தத்தை எதிர்த்தும் தேசிய குடிமக்கள் பதிவேடு,தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை அமலாக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டுள்ளனர். அரசியல் சாசனத்தின் அடிப்படை கூறுகளைப் பாதுகாப்பதற்காக மதங்களைக் கடந்து பொதுவான பிரச்சனைக்காக நாட்டு மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர். ஆனால் இது முஸ்லீம்கள் மட்டுமே நடத்தும் போராட்டமாக மாற்ற மத்திய ஆட்சியாளர்களும் சங் பரிவாரக்கூட்டமும் முயற்சிக்கிறது. இது இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நடக்கும் மோதல் போல் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். இப்படித்தான் மக்களிடம் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ள வாசகங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள மத்திய ஆட்சியாளர்கள் பக்கம் தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு இருப்பது வெட்கக்கேடானது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களை மட்டுமல்ல மோடி, அமித்ஷா பாதையைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் மனுவாத, மதவாத, மக்களை மத ரீதியில் பிளக்கும் கலாச்சாரத்தை எதிர்த்துப் போராடிய திராவிட இயக்கங்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டார். இது வெட்கக்கேடானது. இன்னமும் நேரம் இருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி தமிழகத்தில் என்.பி.ஆர்-ஐ அமல்படுத்த மாட்டோம் என்பதைப் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.