tamilnadu

img

தமிழக, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு இன்சூரன்ஸ் ஊழியர்கள் ரூ. 1,75,00,000

இரண்டரை கோடிகளை கடக்கும்  நேரடி கொரோனா நிவாரணம் ரூ. 25 லட்சத்திற்கு திட்டம்

சென்னை ஏப்.8-
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழக, கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிகளுக்கு இதுவரை ரூ. 1,75,15,335 அனுப்பப்பட்டுள்ளது. நேரடி நிவாரணப் பணிகளும் தமிழகத்தின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பும், தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் தெரிவித்துள்ளன. 

முதல்வர் நிவாரண நிதி
அகில இந்திய சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று வரை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 1,13,68,500, தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 61,46, 835 வழங்கப்பட்டுள்ளது. மொத்த பங்களிப்பு ஒன்றே முக்கால் கோடிகளை கடந்துள்ள நிலையில் இன்னும் ஒரு வார காலத்தில் இரண்டரை கோடிகளை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3400 சங்க உறுப்பினர்கள் அளித்துள்ள பங்களிப்பின் சராசரி ரூ 5000 ஐ தாண்டுகிறது. பலர் ஒரு மாத மொத்த வருமானத்தை தந்துள்ளனர். 339 எல்.ஐ.சி ஊழியர்கள் ஐந்து இலக்க தொகையை வழங்கியுள்ளனர். தொடர்ந்து முதல்வர்கள் நிவாரண நிதிக்கு நன்கொடைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.  கேரளாவின் கோழிக்கோடு கோட்டம் ரூ 50,76,000 ஐ அனுப்பி தனி நபர் சராசரி ரூ 15000 உடன் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் கோயம்புத்தூர் ரூ 20,17,255, தஞ்சாவூர் ரூ 10,03, 252 நன்கொடைகளை இதுவரை அனுப்பியுள்ளன. மதுரை, சென்னை கோட்டம் 2, சேலம், திருநெல்வேலி, சென்னைக் கோட்டம் 1, வேலூர் ஆகிய தமிழக கோட்டங்களும், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், திருவனந்தபுரம் கோட்டங்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடைகளை அனுப்பி வருகின்றன.

கேரள முதல்வர்  பாராட்டு
இன்சூரன்ஸ் ஊழியர்களின் பெரும் பங்களிப்பை கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் நன்கொடைகள்  நிறைவு செய்யப்பட்ட  பின்னர் அதன் விவரங்கள் அரசுக்கு தெரிவிக்கப்படும். உறுப்பினர்கள் நேரடியாக முதல்வர் நிவாரண நிதிக்கு தொகைகளை அனுப்பி விட்டு அதற்கான ரசீதுகளை சங்கத்திடம் ஒப்படைத்து வருகிறார்கள். 

1500 குடும்பங்களுக்கு நேரடி நிவாரணம்
1500 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, உணவுக்கான பலசரக்கு பொருட்கள் ரூ 1000, ரூ 500 மதிப்புள்ள பார்சல்களாக சமூக விலகல் நடைமுறைகள் மீறப்படாமல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிவாரணங்கள் ரூ 25 லட்சத்திற்கு மேற்கொள்ளப்படுவதற்கான திட்டங்கள் உள்ளன.  ஏற்கெனவே முதற்கட்டமாக இன்சூரன்ஸ் அலுவலகங்களில் பணி புரியும் துப்புரவு, பாதுகாப்பு உள்ளிட்ட  பணியாளர்களுக்கு சங்கத்தின் சார்பில் ரூ 5,85,000 ரொக்க நிவாரணமாக வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக நேரடி நிவாரணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

சென்னை மண்டல பொது இன்சூரன்ஸ்  ஊழியர் சங்கம் 750 அமைப்பு சாரா தொழிலாளர்களை  அடையாளம் கண்டு ரூ 1000 பெறுமான பலசரக்கு பொருட்களை வழங்கி வருகிறார்கள். இதற்காக ரூ 7,50,000 நன்கொடைகள் திரட்டப்பட்டு வருகின்றன. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுநர், சமையல் தொழிலாளர், பெயிண்டர், வெல்டர், மெக்கானிக், எலெக்ட்ரீசியன், தெரு வியாபாரி, மீனவர், மேளம் அடிப்பவர், கட்டுமான தொழிலாளர், கார்பென்டர், சுமைப் பணி, தையல், வாட்ச் மேன், துப்புரவு பணியாளர், பழங்குடி இருளர், நரிக்குறவர் சமூக மக்கள் என பல்வேறு குடும்பங்கள் இதில் அடங்கும். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இப் பணி நிறைவடையும். அவரவர் பகுதிக்குட்பட்ட பலசரக்கு கடைகளுக்கு ஆன் லைன் மூலமாக பணம் செலுத்தப்பட்டு செல் மூலமாக தகவல் தரப்பட்டு நிவாரணம் போய்ச் சேருவது உறுதி செய்யப்படுகிறது. சங்கத்திற்கு அப்பாற்பட்ட பலரும் நன்கொடைகளை அளித்துள்ளனர். 

சென்னைக் கோட்டம் 1 சங்கத்தின் சார்பில் 150 அமைப்பு சாரா தொழிலாளர்க்கு ரூ 1,50,000 நிவாரணம் திட்டமிடப்பட்டு மத்திய சென்னை பகுதியில் ஆயிரம் விளக்கு, எழும்பூர் மற்றும் மைலாப்பூர் பகுதிகளில் நிவாரணம் துவங்கியுள்ளது. சேலம் கோட்டத்தில் 100 பி.எஸ்.என்.எல் ஒப்பந்த தொழிலாளர் குடும்பங்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்க்கு ரூ 1,00,000 க்கும் அதிகம் பெறுமான பலசரக்கு பொருட்கள் வழங்கப்படுவது துவங்கி உள்ளது.  

மதுரையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள், பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ 50000 பெறுமான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் நிவாரணங்கள் துவக்கப்பட்டுள்ளன. விருதுநகர் சின்ன மூப்பன் பட்டி, குந்தல குண்டு கிராமங்களில் 130 குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆர்.எம்.காலனி, செட்டி நாயக்கன் பட்டி, அடியனூத்து, வாணி விலாஸ், தோமையார் புரம், பேருந்து நிலையம் பகுதிகளில் நூற்றுக் கணக்கான பொது மக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி கோட்டச் சங்கத்தின் சார்பில் நெல்லை நகரம் அண்ணா நகரில் உள்ள செருப்பு தைக்கும் தொழிலாளர்களின்40 குடும்பங்களுக்கு தேவைப்படுகிற ரூபாய் 20000 மதிப்பிலான பலசரக்கு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வீடு வீடாக சமூக விலகல் வரம்புகளுக்கு உட்பட்டு தன்னார்வலர்கள் வாயிலாக அளித்துள்ளனர். அதேபோல் திருநெல்வேலி பேட்டையில் 120  நரிக்குறவர் சமூக குடும்பங்களுக்கு ஒரு வேளை உணவு ரூபாய் 25000 செலவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு நிர்வாகம் உதவியோடு இரு தன்னார்வலர்கள் அனுமதிக்கப்பட்டு சமூக விலகல் நடைமுறைகளை மீறாமல் அம் மக்களுக்கு வழங்கினர். திருநெல்வேலியில் இதுவரை செய்யப்பட்டுள்ள மொத்த நிவாரண மதிப்பு ரூபாய் 45000 ஆகும்.

இந்தியா முழுவதும்...
வாரணாசி, மீரட், அலகாபாத், பெங்களூர், ஹைதராபாத், ராஜ முந்திரி, கரீம் நகர் மசூலிப்பட்டினம், கடப்பா, போபால், ராய்ப்பூர், நாக்பூர், நாசிக் என நாட்டின் பல பகுதிகளிலும் புலம் பெயர் தொழிலாளர், மருத்துவமனைகள்,  அமைப்பு சாரா தொழிலாளர்க்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடு சந்தித்துள்ள பெரும் துயரை எதிர்கொள்ள எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி மக்கள் நலன் காக்க துணை நிற்போம் என தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி செந்தில் குமார், தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆனந்த் தெரிவித்துள்ளனர்.