சென்னை:
சாதியின் பெயரைச் சொல்லி திட்டியவிவகாரம் தொடர்பாக, காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கூறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மேல்மந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சோலையப்பன். இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2018ஆம் ஆண்டு மேல்மந்தை கிராமத்தில் நடந்த பெத்தனாட்சி அம்மன் கோயில் திருவிழாவின் போது சூரங்குடி காவல் உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன் எனது மகன் கதிரவனை காவல்நிலையத்துக்கு தூக்கி சென்றார். இதுபற்றி கேட்ட என்னை சாதியைச் சொல்லிதிட்டினார். அதன்பின்பு காவல்நிலையம் சென்றேன். அங்கு என் மகனை அரை நிர்வாணமாக அமர வைத்து உதவி ஆய்வாளர்கடுமையாக தாக்கினார். இதில் என் மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனவே உதவி ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை மாநில மனித உரிமைஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் விசாரித்தார். பின்னர் அவரதுதீர்ப்பில், சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும் போது உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன், மனுதாரரின் மகனை சாதியை சொல்லி திட்டி தாக்கி காயப்படுத்தியது தெரிகிறது. இதற்காக உதவி ஆய்வாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் மனுதாரரின் மகன் கதிரவனுக்கு வழங்கி விட்டு உதவி ஆய்வாளரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ஆர். கிருஷ்ணன் வாதாடினார்.