சென்னை:
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் கௌரிசங்கர் (16). இவர் தீராத வயிற்றுவலியால் ஒரு மாதமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 10ஆம் தேதி ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு வயிற்றில் உள்ள பெரிய ரத்தக் குழாயான மகாதமனியின் முக்கியமான பகுதியில் சிறிய பந்து அளவிற்கு வீக்கம் ஏற்பட்டு வெடிக்கின்ற நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரிய வந்தது. இந்த நோய் லட்சத்தில் 2 அல்லது 3 பேருக்கு வரக் கூடும். குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் வருவது மிகவும் அரிதானது.இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் கட்டி வெடித்து உயிருக்கு ஆபத்து நேரிடும். அவருக்கு கடந்த மாதம் 30ஆம் தேதி அன்று மகாதமனியில் இருந்த வீக்கத்தை அகற்றி விட்டு செயற்கை ரத்தக் குழாய் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை ரத்தநாள அறுவை சிகிச்சை துறைத்தலைவர் மருத்துவர் என்.ஸ்ரீதரன் தலைமையில், இருதய அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் ஜோசப்ராஜ், மயக்கவியல் துறைத்தலைவர் மருத்துவர்கள் அனுராதா, பவானி ஆகியோர் மேற்கொண்டனர்.இந்த அறுவை சிகிச்சை சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது. இப்போது அவர் நலமாக உள் ளார். இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் சுமார் 6 லட்ச ரூபாய் வரை செலவாகும்.