பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் மூலம் இந்தியாவின் எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கைக்கோள்கள் திங்களன்று (ஏப்.1) விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இந்திய ராணுவப் பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ என்ற நவீன மின்னணு செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-45ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் சிறீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து திங்களன்று (ஏப்ரல் 1)விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. ‘எமிசாட்’ செயற்கைக்கோள் 436 கிலோ எடை கொண்டது. நமது ராணுவத்தின் உளவுப்பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். உள்நாட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ மையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இது இயங்கும். பிஎஸ்எல்வி ஏவுதலில் எமிசாட்டுடன், வணிகரீதியாக அமெரிக்கா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, லித்துனியா ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட உள்ளன. மேலும், பரிசோதனை முயற்சியில் இஸ்ரோ, இந்திய விண்வெளி அறிவியல் மற்றும்தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐஎஸ்டி) தயாரித்த சிறிய வகை ஆய்வு சாதனங்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன. இதற்கிடையே உலகில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்படஉள்ளன. அதன்படி ராக்கெட் தரையில் இருந்து புறப்பட்டு 749 கி.மீட்டரை அடைந்ததும் எமிசாட்டும்,505 கிமீ தூரத்தில் 220 கிலோஎடை உடைய 28 வெளிநாட்டுசெயற்கைக் கோள்களும் நிலைநிறுத்தப்படும். அதன்பின் ராக்கெட் இறுதிநிலையான பிஎஸ் 4 இயந்திரம் படிப்படியாக உந்தித் தள்ளப்பட்டு, சோதனை முயற்சியில் அதில் வைக்கப்பட்டுள்ள ஆய்வு சாதனங்கள் 485 கி.மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்படும். விண்வெளி அறிவியல் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தும் விதமாகஇஸ்ரோ பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரடியாகப் பார்வையிட சிறீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதை பார்க்க 5கி.மீ அப்பால் நவீன வசதிகளுடன் 5ஆயிரம் பேர் அமரும் அரங்கம் ஒன்றை இஸ்ரோ அமைத்துள்ளது. இதற்கு இஸ்ரோ இணையதளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும்.