சென்னை:
ரவுடி வெங்கடப்பா கொலை வழக்கில் மற்றொரு ரவுடி காக்காதோப்புவின் கூட்டாளி களான ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி பாலாஜி (எ) காக்காதோப்பு பாலாஜியும், மற்றொரு ரவுடியான ரவி (எ) கல்வெட்டு ரவியும் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர்.இருதரப்பினருக்கும் மோதல் இருந்து வந்த நிலையில், ரவியின் ஆதரவாளரான சென்னைவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடப்பா என்பவரை, பாலாஜியும் அவரது நண்பர் ரவியும் சிறையில் இருந்தபடியே கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.அதன்படி, கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி, குழந்தைகளை டியூசனுக்கு அழைத்து சென்ற வெங்கடப்பாவை, பாலாஜி கோஷ்டியினர் வெட்டி கொலை செய்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த வண்ணாரப்பேட்டை காவல் துறையினர், பாலாஜி, ரவிக்குமார் (எ) பொக்கை ரவி உள்பட 11 பேரை கைது செய்தனர்.இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சமீனா, ரவுடி பாலாஜியின் கூட்டாளிகளான பிரகாஷ், சரண்ராஜ், கார்த்திக், அருண், பிரகாஷ், ஆனந்த் ஆகிய 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் பாலாஜி, குமார், பாஸ்கர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர் களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.