சென்னை:
காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் மே 30 வியாழனன்று மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப் பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தர ராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட னர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை அமல்படுத்துக!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 28.5.2019 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மே மாத இறு திக்குள் 2 டி.எம்.சி.யும், ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.2 டி.எம்.சி. தண்ணீரையும் திறந்து விட வேண்டுமென்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 7 வருடமாக காவிரியில் தண்ணீர் வராமல் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டாவது குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வேண்டுமென்று விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தினுடைய உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்படும் என கர்நாடக பாசனத்துறை அமைச்சர் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக சட்டப்போராட்டம் நடத்தி, இறுதியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த மறுப்பது அல்லது அதன் மீது கேள்வி எழுப்புவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.எனவே, காவிரி மேலாண்மை ஆணை யத்தின் உத்தரவை ஏற்று தமிழகத்திற்கு சேர வேண்டிய 9.2 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாநில செயற்குழு தமிழக அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மேலும் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துவதுடன் பாசன வடிகால் வாய்க்கால்களையும் மராமத்து செய்வதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென சிபிஐ (எம்) மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
அதிகரித்து வரும் கந்து வட்டி கொடுமைகளை தடுத்திடுக!
தமிழகம் முழுவதும் கந்து வட்டி கொடுமைகளால் தொடர் தற்கொலைகள் நடந்து வருகின்றன. கடந்த ஒருவாரத்தில் மட்டும் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி கடன் நிலுவைத் தொகையை வசூல் செய்ய அடியாட்களை வைத்து மிரட்டிய காரணத்திற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அதே போல கடலூர் மாவட்டம், பண்ருட்டி எல்.என்.புரத்தைச் சேர்ந்த அருள்வேல் கந்துவட்டிக்கு கடன் வாங்கி கட்ட முடியாததால், கந்து வட்டி கும்பல் மிரட்டி யதால் அருள்வேலும், அவரது தாயாரும் விஷம் குடித்து இறந்துள்ளனர்.
கந்து வட்டி கொடுமைகள் சம்பந்த மாக காவல்துறையினரிடம் புகார்கள் கொடுத்தால் காவல்துறையினர் கந்துவட்டி பேர்வழிகளுக்கு ஆதரவாக கடன் வசூல் செய்யும் ஏஜெண்டுகள் போல செயல்படுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் மீது இத்தகைய புகார்கள் வந்து கொண்டுள்ளன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே, கந்துவட்டி கும்பல்களிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு உரிய நட வடிக்கைகளை மேற்கொள்வதோடு, புகார்கள் வாங்க மறுக்கும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும்; தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் மக்களுக்கு தேவையான கடன் வசதிகளை கூடுதலாக்கித் தர வேண்டுமெனவும் சிபிஐ (எம்) மாநில செயற்கு தமிழக அரசை வலியுறுத்துகிறது.