சென்னை:
தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நகர்ப்புற வேலைத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், வீட்டுமனை - சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் - குறைந்தபட்சக் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் மீது உறுதியான அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழக மக்களுக்கு எவ்வித நலத்திட்டங்களையும் பெரிதாக நிறைவேற்றாத பத்தாண்டு காலஅதிமுக அரசு அகற்றப்பட்டு, திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று குறைந்த காலத்திலேயே மக்களின் எதிர்பார்ப்புகளை கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் நிறைவேற்றி வருவதை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம். கடந்த 13.8.2021 அன்று தாக்கல் செய்யப்பட்டதமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் நகர்ப்புற வேலை ஊதியத் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கென ரூ,100 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதும், பொதுவிநியோகக் கடைகளில் பருப்பு உள்ளிட்ட சமையல் பொருள்கள் வழங்குவது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதும், அரசு வீடுகள் கட்டித்தரப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் பாராட்டத்தக்க அம்சமாகும். நகர்ப்புற வேலை த்திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் விவசாயம் சார்ந்த இதர பணிகளில் ஈடுபடும் விவசாயகூலித்தொழிலாளர்கள் சுமார் 50 லட்சம் பேர்உள்ள நிலையில் இந்த ஒதுக்கீடு போதுமான தல்ல. குறைந்த வேலை நாட்களாவது அளித்திட குறைந்தபட்சம் ரூ.1000 கோடியாவது ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
பருவநிலை மாற்றம், கடந்த கால அரசுகளின் வேளாண் கொள்கைகள் ஆகியவற்றால் விவசாயம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும்வேளையில் வேளாண்துறைக்கு தனிநிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும். வீட்டுமனைக் கேட்டு காத்திருக்கும் அனைவருக்கும் வீட்டுமனை வழங்கிட வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு, அரசே தொகையை செலுத்தி மனையை சொந்த மாக்கிட வேண்டும். தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின்மூலம் நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர் களுக்கு குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் வழங்கிடவேண்டும்.
சமூகப்பாதுகாப்புத் திட்டத்திற்கென ரூ.4807.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். முதியோர் ஓய்வூதிய தொகையைகுறைந்தபட்சம் ரூ.2000 ஆக உயர்த்திடவேண்டும்.சட்ட அந்தஸ்துடன் கூடிய திட்டமாக, முந்தையதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் நலவாரிய சட்டம்மீண்டும் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்திட வேண்டும். விவசாயம் மற்றும் சார்பு பணிகளில் ஈடுபடும் ஆண் தொழிலாளர்களுக்கு 6 மணி நேரத்திற்கு ரூ.600-ம், பெண் தொழிலாளர்களுக்கு 4 மணி நேரத்திற்கு ரூ.400-ம் ஊரக சட்டக்கூலியாக நிர்ணயம் செய்து அறிவித்திட வேண்டும்.நிதிநிலை அறிக்கையில் 8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற அறிவிப்பு உள்ளது. மிகக்கடுமையாக உயர்ந்து வரும் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தைக் கணக்கில் கொண்டு குறைந்தபட்சம் ஒரு வீட்டிற்கான மதிப்பீட்டை ரூ.5 லட்சமாக உயர்த்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.