tamilnadu

img

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி, ரூ.7500 நிவாரணம் வழங்குக... மத்திய அரசுக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்....

சென்னை:
நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்தும் மக்கள் நோயாலும் வறுமையாலும் செத்துமடிவதைத் தடுத்திட மோடி அரசு காலம்தாழ்த்துவதைத் தவிர்த்து உடன் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதையும் ரூ.7500 நிவாரணத்தையும் விரைந்து வழங்கிடவேண்டுமெனவும் அகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் முன்னாள் எம்எல்ஏ, தலைமையில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:கொரோனா இரண்டாவது அலை பெருந் தொற்றால் நாடு முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தினந் தோறும் பல்வேறு மாநிலங்களில் நிகழும் இறப்பு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் பாஜக அரசு தடுப்பூசி விநியோகத்தையும் முழுக்க முழுக்க தனியார்நிறுவனங்களிடம் ஒப்படைத்து வருகிறது. மக்களின் உயிரை விடவும் கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனே பெரிது என இந்த பேரிடர்காலத்திலும் தனது விசுவாசத்தைக் காட்டி வருவதை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தடுப்பூசிகளுக்கும் சாதனங்களுக்கும் ஜிஎஸ்டி வரியை வேறு போட்டு மாபாதகச் செயலில்ஈடுபடுவதை உடன் கைவிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமப்புற - நகர்ப்புறமக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப் படுவதை உடன் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்றுப் பொது முடக்கத்திலும் பொருளாதார மந்த நிலையாலும் 12 கோடிக்கும் அதிகமான உழைப்பாளிகள் வேலைவாய்ப்பை இழந்து வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பிஉள்ள நிலையில் வேலையின்மை மிக தீவிரமான நிலையை எட்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள வரி செலுத்தாத ஏழை குடும்பங்களுக்கும் ரூ.7500 நிவாரணம் வழங்கிடவேண்டுமென கடந்த 14 மாதங்களாக அனைத்து தரப்பாலும் வைக்கப்படும் கோரிக்கை குறித்து மோடி அரசு மௌனம் காப்பது நாட்டுமக்களின் உயிரோடு விளையாடும் போக்காகும். ஏற்கெனவே போதிய ஊட்டச்சத்து இன்மையால் இருக்கும் மக்களை இந்த வருமானமிழந்த காலத்தில் மேலும் சத்துக்குறைவற்றவர்களாக மாற்றும். நோய்த்தொற்று வெகுவாக அவர்களை தாக்கும் அபாயம் ஏற்படும்.

ஆகவே வரி செலுத்தாத ஏழை, குடும்பங்களுக்கு ரூ.7500 நிவாரணத்தை உடன் வழங்கிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைத்திட்டத்திற்குப் போதிய நிதி ஒதுக்கி 200 நாட்கள் வேலையும் - தினக்கூலி ரூ.600 ஆகவும் உயர்த்தி முழுமையாக வழங்கிட வேண்டும். நுண் நிதி நிறுவனங்களில் கிராமப்புற பெண்கள் வாங்கியிருக்கும் கடன் களை நிபந்தனையின்றி ஓராண்டுக்கு ஒத்திவைப்பதற்கு ரிசர்வ் வங்கி மூலம் உரிய நடவடிக்கையை உடன் எடுக்க வேண்டும்.இதுகுறித்து மத்திய மோடி அரசுக்கு மாநில முதல்வர் அவர்கள் கடிதம் அனுப்பிடவேண்டும் என கோருகிறோம்.மாநில அரசு கொரோனா பெருந்தொற் றைக் கட்டுப்படுத்திட எடுத்துவரும் போர்க்கால நடவடிக்கைகளையும் - நிவாரண உதவிகள் சங்கம் வரவேற்கிறது. கிராமப்புறங்களில் போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செய்து- முகாம்கள் நடத்தி அனைவருக்கும் பரிசோதனையும் - தடுப்பூசி போடப்படுவதையும் உத்தரவாதப்படுத்த வேண்டும். கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்த வைத்திய மருந்துகளை முன்கூட்டியே வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அனைத் தும் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், முதியோர்கள் - பெண்கள் - குழந்தைகள் மற்றும் தேவைப்படுவோருக்கு அங்கன் வாடி மற்றும் சத்துணவு மையங்கள் மூலம் உணவு சமைத்து வழங்கிட வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்தில் வழங்கிடஉள்ள 13 சமையல் பொருள்களுடன் ஆகியவற்றையும் சேர்த்து வழங்கிட உடனடி நடவடிக்கை வேண்டும். மகாத்மா காந்தி தேசியஊரக வேலைத்திட்டம் தற்போது பெரும் பாலான ஊராட்சிகளில் நிறுத்தப்பட்டுள்ளது. 55 வயதைக் கடந்தவர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது. உடன் அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா கால விதிகளை கறாராகப் பின்பற்றி வேலை துவங்கிட வேண்டும்அல்லது ரூ.3000 மாத நிவாரணம் மத்திய அரசு வழங்க வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்டதொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கவேண்டும். முந்தைய அதிமுக ஆட்சியில்ஊரக வேலைத்திட்டத்தை ஊழல்முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் சிதைக்கப்பட்டுள்ளதை ஒழுங்குபடுத்தி முழுமையாகஅமல்படுத்திடவும் வேண்டும். ஊராட்சிகளில்கொரோனா காலத்தில் சிறப்பாக சேவையாற்றி வரும் “தூய்மைகாவலர்”களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கான நிவாரணம்வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் விரைவாக நிறைவேற்றிட கோருகிறோம்.இணைய வழியாக நடைபெற்ற கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மத்திய கவுன்சில் உறுப்பினர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், மத்திய செயற்குழுஉறுப்பினர் எஸ்.திருநாவுக்கரசு ஆகியோர் பங்கேற்றனர்.