சென்னை, ஏப்.22-தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் பேச்சிப்பாறை பகுதிகளில் 2 சென்டிமீட்டர் மழையும், உதகையில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இதனிடையே, இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், இலங்கைக்கு தென்கிழக்கே, வரும் 25 ஆம் தேதி காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின்னர், 48 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதால், மழைக்கான சாத்திய கூறுகள் உள்ளன. இருப்பினும், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின்னர் அதன் நகர்வை வைத்தே முழுமையாக கூற முடியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.