tamilnadu

ஆட்டோ ஓட்டுநர் கொலையில் 4 பேர் கைது

ராயபுரம், மே 30-தண்டையார்பேட்டை பட்டேல் நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (28). ஆட்டோஓட்டுநர். இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். புதனன்று மாலை எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள ஐ.ஓ.சி. டீசல் செட் அருகே உள்ள முள்புதரில் மூர்த்தி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து ஆர்.கே.நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்லையில் ஆட்டோ ஓட்டுநர்  மூர்த்தி மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு உள்ளது. கடந்த வருடம் திருமலை (29) என்பவரை அரிவாளால் வெட்டியதால் மூர்த்தி சிறைக்குச் சென்று வந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து அதேபகுதியைச் சேர்ந்த திருமலையிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகபேசியுள்ளார். தொடர்ந்து நடந்த விசாரணையில் திருமலை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோ டிரைவர் மூர்த்தியை கொலை செய்தது தெரியவந்தது.புதனன்று (மே 29) மதியம் திருமலை அவரது நண்பர்கள் சரவணன், பசுபதி, மோகன் ஆகியோர் மூர்த்தியை சந்தித்து, இனி பழைய பகையை மறந்து நண்பர்களாக இருப்போம் எனக் கூறியுள்ளனர். பிறகு அனைவரும் மது அருந்த மணலிக்கு சென்றுள்ளனர். பிறகு அங்கிருந்து திரும்பும்வழியில் கொருக்குப்பேட்டை- மணலி சாலைபகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் அருகே மூர்த்தியை அழைத்துச் சென்று  4 பேரும் சேர்ந்து கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.பின்னர் அவரின் உடலை  தண்டையார்பேட்டை- எண்ணூர் நெடுஞ்சாலையில் ஐ.ஓ.சி. டீசல் செட் அருகே முள்புதரில் வீசிச் சென்றனர். இதையடுத்து திருமலை உள்பட 4 பேரையும் ஆர்.கே.நகர் காவல்துறையினர் கைது செய்தனர். முன் விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை 4 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.