சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிக மாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு, விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் நிர்வாக உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து, கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து, மறுஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இவ்வழக்கை கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன், பொன்முடி 64.90% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதாக தெரிவித்தார். மேலும், பொன்முடியின் விடுதலையை ரத்து செய்தும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மேல்முறையீடு செய்ய தண்டனையை நிறுத்தி வைத்தது 30 நாட்கள் கால அவகாசம் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.