சென்னை:
திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலு எம்.பி.யும் பொதுக்குழு மூலம் முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பேராசிரியர் க.அன்பழகன் கடந்த மார்ச் 7 ஆம் தேதி காலமானதை அடுத்து அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவி காலியாக இருந்து வந்தது. இதையடுத்து அந்த பதவிக்கு துரைமுருகன் போட்டியிட உள்ளதாகவும் மார்ச் 29 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் பொதுக்குழு நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்குள் கொரோனா விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் மார்ச் 29 ஆம் தேதி நடைபெற இருந்த பொதுக்குழு ரத்து செய்யப்பட்டது.அப்போது ரத்து செய்யப் பட்ட திமுக பொதுக்குழு 5 மாதங் களுக்கு பிறகு காணொலி காட்சி மூலம் புதனன்று (செப்.9) நடைபெற்றது. மாவட்ட தலைநகரங்களில் உள்ள கட்சி அலுவலகம் மற் றும் திருமண மண்டபங்களில் தனிமனித இடைவெளியை பின் பற்றி இருக்கைகள் அமைக்கப்பட்டு பொதுக்குழு நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் இருந்து காணொலி வாயிலாக பொதுக் குழு உறுப்பினர்கள் பங்கேற் றுள்ளனர். இந்த கூட்டத்தில் 67 இடங்களில் இருந்து திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 3,500 பேர் பங்கேற்றனர்.அதில் திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் முன்மொழியப்பட்டனர். அதை தொடர்ந்து மூத்த நிர்வாகிகள் சிலர் வழிமொழிந்ததை அடுத்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஒரு மனதாக இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.
திமுக பொதுச் செயலாளராக அண்ணா, நாவலர் நெடுஞ் செழியன், பேராசிரியர் அன்பழகன் போன்ற தலைவர்கள் முன்பு அந்தப் பதவியை வகித்தவர்கள்.திமுக பொருளாளராக எம்.ஜி.ஆர். அதற்கு பிறகு சாதிக் பாட்ஷா, ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் இருந்திருக்கின்றனர். இந்தப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ஆர்.பாலு இதற்கு முன் முதன்மைச் செயலாளராக இருந்தார்.பொதுச்செயலாளர், பொருளாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன், டி.ஆர்.பாலுவிற்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
ஆ.ராசா, பொன்முடிக்கு பதவி
திமுக சட்டவிதிகளில் மாற்றங் கள் செய்யப்பட்டு 3 துணை பொதுச்செயலாளர்கள் என்ற எண்ணிக்கை 5 ஆக மாற்றப் பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் திமுக துணை பொதுச் செயலாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளதாகவும் பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.ஏற்கனவே திமுக துணை பொதுச்செயலாளராக அந்தியூர் செல்வராஜ், ஐ.பெரியசாமி மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.