போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்திற்கான 6வது சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது. பேச்சுவார்த்தை மூலமே ஒப்பந்தத்தை முடிக்க விரும்புகிறோம் என சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் 8 போக்குவரத்துகழகங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 1.9.2019 முதல் அமலாகி இருக்க வேண்டும். இதற்கான பேச்சுவார்த்தை அதிமுக ஆட்சியில் 2 முறையும், திமுக ஆட்சியில் 3 முறையும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையல் 6வது கட்ட பேச்சுவார்த்தை புதனன்று (ஆக.3) குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
மின்சாரதுறை உள்ளிட்ட இடங்களில் இருப்பதுபோல், பே-மேட்ரிக்ஸ் முறையில் ஊதியத்தை வழங்க தொமுச, சிஐடியு உள்ளடக்கிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதனை அரசு ஏற்க மறுத்து வருகிறது. இதன்காரணமாக கடந்த ஜூலை 11ந் தேதி நடைபெற்ற 5வது கட்ட பேச்சுவார்த்தையிலும் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனால் ஜூலை 19 அன்று மாநிலம் முழுவதும் மேலாண்மை இயக்குநர்களிடம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) வேலைநிறுத்த அறிவிப்பு கொடுத்தது. அதில், ஆக.3 அல்லது அதற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் வேலைநிறுத்தம் மேற்கொள்வோம் என்று சிஐடியு எச்சரித்திருந்தது.
இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்கும் வகையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மு.சண்முகம் எம்.பி., கி.நடராசன் (தொமுச), அ.சவுந்தரராசன், கே.ஆறுமுகநயினார் (சிஐடியு) உள்ளிட்டு 66 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், போக்குவரத்து முதன்மை செயலாளர் முனைவர் கே.கோபால், நிதித்துறை இணைச்செயலாளர் அருண் சுந்தர் தயாளன், தொழிலாளர் துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன், 8 போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்கு செல்லும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன், "பேச்சுவார்த்தை மூலமே சுமூக தீர்வு காண விரும்புகிறோம். வேலைநிறுத்தம் நடந்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற வருத்தம் உள்ளது" என்றார்.