tamilnadu

img

முதல் டோஸ் போட்டவர்களுக்கு 75 சதவீத எதிர்ப்பாற்றல் உள்ளது....

சென்னை:
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 75 சதவீதம் முதல் 95 சதவீதம்வரை எதிர்ப்பாற்றல் உள்ளது எனசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அரசு கிங் கொரோனா மருத்துவமனைக்கு தனியார் அறக்கட்டளை வழங்கிய 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை திங்களன்று (ஜூன் 14) சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். பின்பு, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 

“முதல்வரின் வேண்டுகோளை ஏற்று ஏராளமான தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன. இது மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த உதவியாக உள்ளது. தமிழ்நாட்டில் 54,850 படுக்கைகள் காலியாக உள்ளன என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனா தினசரி பாதிப்பு 14 ஆயிரமாக குறைந்துள்ளது. 11 மாவட்டங்களில் தொற்றை குறைக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சமாக குறைந்துள்ளது. இறப்பின்சதவிகிதத்தை மேலும் குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தொற்றின் அலை முழுமையாக குறைந்தாலும், அடுத்த அலைகுறித்த எச்சரிக்கை இருப்பதால், தொடர்ந்து முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் 1493 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 77 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ஞாயிறன்று வரை 1 கோடியே 3 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு 75 சதவீத நோய் எதிர்ப்பு திறன் உள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு 95 சதவீத நோய் எதிர்ப்பாற்றல் உள்ளது என்று வேலூர் சிஎம்சி மருத்துவ மனையின் வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.