சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்திற்கு மாணவர்களை அழைத்து வரவும், தேர்வு முடிந்த பின்னர் அவரவர் பகுதிகளில் விடவும் பேருந்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் ஜுன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர்களை தேர்வு மையத்துக்கு அழைத்து வர பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அமைச்சர் டிவிட்டர் பக்கத்தில், தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், அதற்கான ஏற்பாடுகள் வகுப்பறைகளில் செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.