சென்னை:
தென் மாவட்டங்கள் பொருளாதார வளர்ச்சி அடையும் வகையில் விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரம் சிப்காட் பூங்காவில் சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 400 கோடி செலவில் உலகத் தரம்வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஒருங்கிணைந்த ஆடை பூங்கா உருவாக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,”இயற்கை சூழலை பாதுகாக்கவும் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 சிப்காட் தொழிற் பூங்காக்கள் மேம்படுத்தப்படும் என்றார்.பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், “வெளிச்சந்தையில் நெய்தல் என்ற புதிய வணிக பெயரில் உப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்படும். முதன்முறையாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் 6 கோடி செலவில் உற்பத்தி துவங்கப்படும். உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களது குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஆண்டொன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் அதிக முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுவதால் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பூங்காவில் 300 கோடி ரூபாயில் இந்தியாவிலேயே முதன்மையான வருங்கால நகர் திறன் பூங்கா உருவாக்கப்படும். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் 576 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை மற்றும் சிறப்பு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய சிப்காட் பூங்கா உருவாக்கிக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.