சென்னை:
கொரோனா பரிசோதனைக்காக தமிழக அரசு நாள் ஒன்றுக்கு ஐந்து கோடி ரூபாய் செலவிடுகிறது. பாதி தொகையை மத்திய அரசு ஏற்க பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி செவ்வாயன்று ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகையில், 712.64 கோடி ரூபாய் தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியாக ஒதுக்கிய நிலையில், 3000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கொரோனா பரிசோதனைக்காக நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் தமிழக அரசு செலவிடுகிறது. பி.சி.ஆர். சோதனைக்கு ஆகும் செலவின் பாதி தொகையை மத்திய அரசு ஏற்க வேண்டும். பி.சி.ஆர். சோதனைக்கான செலவை பிரதமர் கேர் நிதியில் இருந்து ஒதுக்கவும்’’ என கோரிக்கை விடுத்துள்ளார்.
பட்ஜெட் மதிப்பீடுகளின் படி மத்திய மாநில அரசுகளின் வருவாயில் இந்தாண்டு பற்றாக்குறை ஏற்படுவதால் அதை ஈடுகட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.9ஆயிரம் கோடியை சிறப்பு மானியமாக வழங்கவேண்டும், ஏற்கனவே மாநில பேரிடர் மீட்பு நிதி காலியாகி விட்டதால் அதற்கு ரூ.1000 கோடி ஒதுக்கவேண்டும். செப் டம்பர் மாதம் ரேசன் கடைகளில் விநியோகம் செய்வதற்கு 55ஆயிரத்து 637 மெட்ரிக் டன் துவரம்பருப்பை மாநிலத்திற்கு விடுவிக்கவேண்டும், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, மூலதன மானியம் வழங்கவேண்டும், நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகை உடனடியாக வழங்கவேண்டும்,.நெல் கொள்முதலுக்கான மானியம் ரூ.1321 கோடியை விரைவாக விடுவிக்கவேண்டும உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சர் இந்த கூட்டத்தில் பிரதமரிடம் வலியுறுத்தினார்.