tamilnadu

img

தமிழக தொழிலாளர் சந்திக்கும் பிரச்சனைகளை சரி செய்க... தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் சிஐடியு தலைவர்கள் வேண்டுகோள்....

சென்னை:
தமிழகத்தில் பல்வேறு தொழில்களில் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசனை செவ்வாயன்று (ஜூன் 22) சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், துணைப்பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், துணைத்தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர். 

அந்த மனுவின் விவரம் வருமாறு:
தொழிலாளர் நலனை பாதுகாக்கவும், தொழில் வளர்ச்சிக்கான திறனை மேம்படுத்தவும் தொழிலாளர் நலத்துறையின் பெயரை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையாக மாற்றம் செய்திருப்பதை சிஐடியு வரவேற்கிறது.தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் தொழிலாளர் ஆணையரகம் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இயக்ககம் ஆகிய  இரு அமைப்புகள் உள்ளன. இந்த இரு அமைப்புகளின் செயல்பாடுகளில் மேலும் அபிவிருத்தி காண வேண்டிய அவசியம் உள்ளது.தொழிலாளர்களின்  அடிப்படை உரிமைகளான சங்கம் சேரும் உரிமை, கூட்டுபேர உரிமையை உறுதி செய்வது தற்போதைய அவசர, அத்தியாவசிய தேவையாக உள்ளது என்பதை கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

1. சட்ட விதிகள் உருவாக்கம்

ஒன்றிய அரசு நூறாண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்களின் பல்வேறு போராட்டங்களின் விளைவாக உருவாக்கப்பட்ட 44 வகையான தொழிலாளர் சட்டங்களை  அடியோடு திருத்தி ஊதியம் தொகுப்பு, தொழிலுறவு தொகுப்பு, சமூக பாதுகாப்பு தொகுப்பு, பணியிட பாதுகாப்பு தொகுப்பு என நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளாக  சட்டம் இயற்றியுள்ளது.  இதன் விளைவாக பெரும்பகுதி தொழிலாளர்கள் சட்ட பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.தொழிலாளர் நலனை கருத்தில் கொண்டு  ஒன்றிய அரசின்  தொழிலாளர் சட்டங்களின் அடிப்படையில் மாநில அரசு சட்ட விதிகள் உருவாக்கும் முன்பும், விதிகள் இறுதிப்படுத்தும் முன்பு தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறுவதற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திட வேண்டுகிறோம்.

                        **********

2. முத்தரப்புக் குழுக்கள்

தொழிலாளர் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம். தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், குறைந்தபட்ச கூலி ஆலோசனைக்குழு, ஒப்பந்தத்தொழிலாளர் முறைப்படுத்தல் மற்றும் நீக்குதல் ஆலோசனைக்குழு ,தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டம் மற்றும் கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத்தொழிலாளர் நல வாரியம் உட்பட 17 தொழில் வாரி நல வாரியங்கள்,  பல்வேறு தொழில்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் குழுக்கள் உள்ளிட்ட சட்டப்பூர்வமான முத்தரப்புக் குழுக்கள் முறையாக அமைக்கப்படவில்லை. புதிய அரசு பொறுப்பேற்ற பின் தற்போது முத்தரப்புக் குழுக்கள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளதை வரவேற்கிறோம். அனைத்துமுத்தரப்புக்குழு குழுக்களிலும் மத்திய தொழிற்சங்கமான சிஐடியுவிற்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.

                        **********

3. சட்டங்கள் அமலாக்கம்

தமிழகத்தில் பெரும்பாலான நிறுவனங் களில் குறைந்தபட்ச ஊதியம், ஒப்பந்த தொழிலாளர் (நீக்குதல்- முறைப்படுத்தல்) சட்டம், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 8 மணி நேரவேலை, சமவேலைக்கு சம ஊதியம், வாரவிடுமுறை சட்டம், தேசிய பண்டிகை விடுமுறைசட்டம், மகப்பேறு சட்டம் போன்ற தொழி லாளர்களின் உரிமைகளை காக்கும் சட்டங்கள் அமலாவது இல்லை. 8 மணி நேரத்திற்கு மேல் செய்யும் வேலைக்கு சட்டப் படியான மிகைநேர ஊதியம் வழங்கப்படுவதில்லை.   இதில் தொழிலாளர் நலத்துறையும், தொழிலாளர் ஆணையரகம் சட்டங்களை அமலாவதற்கான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொழில் நிறுவனங்களில் பணியிட பாதுகாப்பு மற்றும் தொழில் ரீதியிலான நோய்கள் மற்றும் விபத்துகளில்  தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்  உரிய  தலையீடும், கண்காணிப்பும், அமலாக்கமும் உறுதிப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                        **********

4. காலிப் பணியிடங்கள்

தொழிலாளர் ஆணையரகம், தொழிலாளர் ஆய்வாளர், தொழிலாளர் அலுவலர் மற்றும் உதவி ஆணையர், துணை ஆணையர் அலுவலகங்கள், கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரிய தலைமை அலுவலகங்கள் மற்றும் அதன் கீழ் உள்ள  மாவட்ட நல வாரிய அலுவலகங்களில் போதுமான எண்ணிக்கையில்  ஊழியர்கள் இல்லை. இதனால் தொழிலாளர் நல நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. இது போன்று தொழிலாளர் நீதிமன்றங்களி லும் ஊழியர் பற்றாக்குறை மற்றும் நீதிபதிகள் நிரப்பப்படாமல் உள்ளதால் ஆயிரக்கணக்கான வழக்குகள் விசாரணையின்றி நிலுவை யில் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு தொழிலாளர் துறை மற்றும் தொழிலாளர் நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங் களை நிரப்புவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.மேலும், மின்சார வாரியம், கூட்டுறவு, நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் போன்ற அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் உள்ள காலிப்பணி யிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை யினை மேற்கொள்ள வேண்டும்.

                        **********

5. முறைசாரா நல வாரியங்கள்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் மற்றும் உடலுழைப்புத்தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட 17 தொழில் வாரியான  நல வாரியங்களில் சுமார் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.  முந்தைய அரசு இந்த நல வாரியங்களில்  தொழிலாளர்கள் உறுப்பினராக பதிவு செய்வதற்கும், புதுப்பித்தல் மற்றும் பணப்பயன் கேட்புக்கும் என இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் முறையை அவசரகதியில் நடைமுறைப்படுத்தியது.  இதனால் கிராமப்புற எழுத்தறிவற்ற தொழிலாளர்கள்  பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த ஆன்லைன் விண்ணப்பங்களை நிர்வகிக்கும்  மாவட்ட சமூகபாதுகாப்பு திட்ட அதிகாரிகளும்   சிரமப்படுகின்றனர். தற்போதும் ஆன்லைன் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்படாமல் நிராகரிக்கும் நிலை உள்ளது.இதனால் தொழிலாளர்கள் நல வாரிய பயன்களை பெறமுடியாத நிலைக்கு ஆளாகியுள்ள னர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகை யில் இணையவழியில் விண்ணப்பிக்கும் முறையோடு பழைய நடைமுறைப்படி நேரடியாக விண்ணப்பிக்கும் முறையும் செயல்படுத்த உரிய ஏற்பாட்டினை செய்ய வேண்டும்.மேலும் முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களில் வழங்கப்படும் பணப்பயன்களை இரட்டிப்பாக்கவும், அதற்கு தேவையான நிதியை முழுமையாக ஒதுக்கிடவும் உரிய நடவடிக்கை யினை மேற்கொள்ள வேண்டும்.முறைசாரா தொழிலாளர் நல வாரிய செயல்பாடுகளில் அபிவிருத்தி காணும் வகையில்  முத்தரப்புக்குழுக்களின் கூட்டத்தை குறைந்தபட்சம் 3 மாதத்திற்கு ஒருமுறை கூடுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட கண்காணிப்புக்குழுக்களை உரிய கால இடைவெளியில் நடத்தி குறைபாடுகளை கண்டறிந்து களைவதற்கும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர் சட்டம் பொருந்தாத தோட்டம் உள்ளிட்ட குறு-சிறு-நடுத்தரத் தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்களையும் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய வழிவகை செய்திட வேண்டும்.

                        **********

6. பழிவாங்கல் நடவடிக்கைகள்

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இயங்கி வரும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்  தொழிற்சங்கத்தை ஏற்க மறுத்துசங்க முன்னணி ஊழியர்கள் மீது  பணிநீக்கம், பணியிடை நீக்கம், பணியிட பாகுபாடு, ஊர்மாற்றம், சம்பளப் பிடித்தம் போன்ற பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.இத்தகைய பிரச்சனைகளில்  தொழிலாளர் துறை மூலம் தொழிற்தாவா எழுப்பப்பட்டு,  அதன் மீது நடைபெறும் சமரச பேச்சுவார்த்தைகளில் நிர்வாகங்கள் பங்கேற்காமல் அரசை உதாசீனப்படுத்துகின்றன. சில பிரச்சனைகளில் நிர்வாகங்கள் பங்கேற்றாலும் சமரச அதிகாரிகள் அளிக்கும் அறிவுரைகளை ஏற்க மறுக்கின்றன.  குறிப்பாக, சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பன்னாட்டு  நிறுவனங்களில் தொழிலாளர் விரோத பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு தீர்வு ஏற்படுவதற்கு உரிய தலையீடு செய்ய வேண்டும்.

                        **********

7. காலமுறை ஊதியம் 

தமிழ்நாட்டில் மதிப்பூதியம், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் அங்கன்வாடி, சத்துணவு, டாஸ்மாக், உள்ளாட்சி அமைப்புகள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களது நீண்டகால கோரிக்கைகளாக பணி வரன்முறை, காலமுறை ஊதியம் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு  ஊழியராக்க வேண்டும் என்பது உள்ளிட்ட  கோரிக்கை களை நிறைவேற்றிட  வேண்டும்.

                        **********

8. தொழிலாளர் நீதிமன்றங்கள்  தீர்ப்புகள்

தொழிலாளர் நீதிமன்ற வழக்குகளில் தொழிலாளர்களுக்கு சாதகமாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை எதிர்த்து  அரசு மேல்முறையீடு செய்துள்ள வழக்குகளை திரும்பப் பெற்று உத்தரவுகளை அமலாக்க வேண்டும். தொழிற்தாவாக்களின் மீதான விசாரணை மற்றும் முடிவுக்கு குறிப்பிட்ட காலம் நிர்ணயம் செய்திட வேண்டும்.

                        **********

9) ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுப்பு

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக, உரிமைகளுக்காக பேரணி, ஆர்ப்பாட்டம், கூட்டம் போன்ற ஜனநாயக ரீதியில் போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுக்கிறது. உலக தொழிலாளர்களின் உரிமை தினமான மே தின நிகழ்ச்சிகளுக்கு கூட அனுமதிமறுக்கப்படுகிறது.  தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்திற்கு முன்பு கூடுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது.  தலைநகர் சென்னையில் மக்கள் நடமாட்டம் இல்லாத வள்ளுவர் கோட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், காயிதே மில்லத் மணிமண்டபம் (தெற்கு கூவம் சாலை) அரசினர் தோட்டம் அருகில் என நான்கு  இடங்களில்  மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.  அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், ஜனநாயக அமைப்புகள் ஏராளமாக உள்ள நிலையில் இந்த நான்கு இடங்கள் மட்டும் போதுமானதாக இல்லை.இந்தியாவில் முதன் முதலில் மேதினத்தை கொண்டாடிய பெருமைக்குரிய இடமாக மெரினா கடற்கரையில் பொது நிகழ்ச்சிகளுக்கென அமைக்கப்பட்டிருந்த சீரணி அரங்கம் அதிமுக ஆட்சியில் இடிக்கப்பட்டது. அண்ணாசாலை மன்றோ சிலையிலிருந்து பேரணிகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிமுக ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டது. அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங் களுடன் சென்னை பெருநகர காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி போராட்ட இடங்களை தேர்வு செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

                        **********

10. தொழிலாளர்கள் மீதான  வழக்குகள்

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவன தொழிலாளர்கள் ஜனநாயக வழியில்  உரிமைக்கான போராட்டங்களை  நடத்திய போது  காவல்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் முந்தைய அதிமுக ஆட்சியில் போடப்பட்டுள்ள தொழி லாளர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும்.

                        **********

11. ஒப்பந்தத் தொழிலாளர்கள்

முந்தைய ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஒப்பந்த தொழிலாளர் முறை மிக வேகமாகஅதிகரித்தது. தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் அரசு சேவை துறைகளிலும் பெருமளவில் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். நிரந்தரத்தன்மையுள்ள பணிகளில்  480 நாட்கள் பணியாற்றிய அனைத்து ஒப்பந்தத்தொழிலாளர்களையும் நிரந்தரமாக்கிடவும், ஒப்பந்த தொழிலாளருக்கு குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.21,000மாக  வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                        **********

12. வெளி மாநிலத் தொழிலாளர்கள்

தமிழ்நாடு முழுவதும்  வெளி மாநில தொழிலாளர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களை அழைத்து வரும் ஏஜெண்டுகள் எந்தவித ஆவணங்களை பராமரிப்பதில்லை. மாநிலம் முழுவதும் பல்வேறு தொழில்களில் பரவிக்கிடக்கும் தொழிலாளர்கள் விபரங்கள் சேகரிக்கப்படாமல் உள்ளது.  இந்த தொழிலாளர்களை முறைப்படுத்திட புலம்பெய ரும் தொழிலாளர் சட்டத்தை முழுமையாக அமலாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

                        **********

13. பெண் தொழிலாளர்கள்

பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் அவர்களது பாதுகாப்பிற்கான உத்தரவாதமும், கழிப்பறை, ஓய்வறை போன்ற அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தவும், சம வேலைக்கு சம ஊதியம் சட்டம், பேறுகால சட்டம் பெண் தொழிலாளர்களுக்கு அமலாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் புகார் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். முறைசாரா பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு கால நிவாரணத்தொகை வழங்கப்பட வேண்டும்.

                        **********

14. தொழிலாளர் தங்கும் விடுதிகள்

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் சென்னை, மாமல்லபுரம், வால்பாறை, குற்றாலம் ஆகிய இடங்களில் தொழிலாளர் தங்கும் விடுதிகள் உள்ளன.   இந்த விடுதிகள் முறையாக பராமரிக்கப்படுவதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.  அரசுக்கு சொந்தமான இந்த விடுதி வளாகத்தை முந்தைய அதிமுக அரசு தனியாருக்கு குத்தகைக்கு விட்டுள்ளதை ரத்து செய்து அரசின்நேரடி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டு கிறோம்.மேலும் ஏற்காடு, குன்னூர், கொடைக்கானல், கன்னியாகுமரி பகுதிகளில் புதிதாக தொழி லாளர் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                        **********

15. தொழிற்சங்க நினைவிடம்

இந்தியாவில் முதன் முதலில் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட பெருமைக்குரிய மெட்ராஸ் லேபர் யூனியன் (1918) ஆகும். இந்த சங்கத்தில்மறைந்த தலைவர்கள் திரு.வி.க., அன்னி பெசன்ட் அம்மையார். சர்க்கரை செட்டியார் போன்ற தலைவர்கள் தலைமையேற்று வழிநடத்தியுள்ளனர்.  நூறாண்டு பழைமையும் பெருமையும் வாய்ந்த மெட்ராஸ் லேபர் யூனியன் அலுவலகம் பெரம்பூர் பட்டாளத்தில் சிதிலமடைந்துள்ளது. இந்த அலுவலக கட்டிடத்தை தமிழக அரசு ஏற்று தொழிற்சங்க நினைவு இல்லமாக அறிவித்திட வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.