சென்னை:
இறுதிப்பருவ ஆன்லைன் தேர்வு குளறுபடி குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதிப்பருவத் தேர்வு செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதிவரை ஆன்லைன் மூலம் நடைபெற்றுவருகிறது. இறுதிப்பருவத் தேர்வினை அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள் உள்பட ஒரு லட்சத்து 41 ஆயிரம் மாணவர்கள் எழுதுவதற்கு விண்ணப்பித் துள்ளனர்.ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு மணி நேரம் தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணிமுதல் 11 மணிவரையும், 12 மணி முதல் ஒரு மணிவரையும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரையும், 4 மணிமுதல் 5 மணிவரையும் தேர்வு நடைபெறுகிறது.
முதல் முறையாக முழுவதும் ஆன்லைனில் தொடங்கிய அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் 90 விழுக்காட்டிற்கு மேல் மாணவர்கள் எந்தவித தொழில்நுட்ப பிரச்சனை இல்லாமல் தேர்வு எழுதியுள்ளனர்.மொபைல் ஹேங், இணையதளம் காரணங்களால் சிலரால் எழுத இயலவில்லை, அவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக அலுவலர் தெரிவித்தார்.மேலும் இரண்டு விழுக்காடு மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் தேர்வில் குளறுபடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வரவில்லை. தேர்வுகள் முழுவதும் முடிந்த பின்னர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும் எனவும் அலுவலர் தெரிவித்தார்.