சென்னை:
இந்திய ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் இயக்கம் மக்கள் இயக்கமாக உருவெடுக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி திங்களன்று (ஜூன் 28) தமிழகம் முழுவதும்நூற்றுக்கணக்கான மையங்களில்பேரெழுச்சியோடு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய கட்சிகள் இணைந்து இந்தப் போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்தின.
3 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இப்போராட்டம் முதல்நாளிலேயே பல நூறு மையங் களில் நடைபெற்றது.பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை கட்டுப்படுத்தவேண்டும்; 2014 முதல் உயர்த்தப் பட்ட கலால் வரிகளை பெருமளவு குறைத்து, விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்; கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புமருத்துகள் உட்பட உயிர் காக்கும் மருந்துகளின் கள்ள வணிகத்தை தடுத்து, நியாய விலையில் மக்களுக்கு மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்; செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோ டெக் தடுப்பு மருந்துகள் உற்பத்திவளாகத்தை தமிழ்நாடு அரசிடம்தாமதமின்றி வழங்க வேண்டும்; தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப, போதுமான தடுப்பூசி மருந்துகளும், பேரிடர் கால நிவாரண நிதியும் வழங்க வேண்டும்; அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; தொழில் முடக்கம், வேலையிழப்பு, வேலையின்மை மற்றும் வருமானத்திற்கு வழியில்லாத காரணங்களால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு மாதம் ரூபாய்7,500 வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டும்; மத்திய உணவுத் தொகுப்பில் இருந்து நபருக்கு தலா 10 கிலோ வீதம் உணவு தானியங்கள் விலையில்லாமல் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாபெரும் இயக்கம் நடைபெற்றது.திருவள்ளூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,“பெட்ரோல்-டீசல் விலை நாடு முழுமைக்கும் சதம் அடித்து வருகிறது. “ரோம் நகர்பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன்” போன்று மக்களைஅலட்சியம் செய்து சுக போகங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் பிரதமர் மோடி” என்று கடுமையாக சாடினார்.
ஒன்றிய அரசு பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அதானி, அம்பானி போன்றோரை வளமாக்கிக் கொண்டுவருகிறது. ஏழைகளும், சாதாரண நடுத்தர மக்களும், விவசாயிகளும் பெரும் துன்பத்தில் இருக்கும்போது மானியம் வழங்க மறுக்கும் பாஜக அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஏழு வருடத்தில் ரூ.5.25 லட்சம் கோடி தள்ளுபடி செய்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் பட்டியலின மக்கள், அடித்தட்டில் உள்ள பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்டோரை வஞ்சித்து வரும் மதவெறிக் கூட்டமாம் பாஜகவுக்கு எதிராக மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்து அதனை அமல்படுத்த வலியுறுத்தி இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து நடத்தும் இந்த இயக்கம் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக உருவெடுக்க பாடுபடுவோம் என்றும்கே. பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
தலைவர்கள்
மத்தியசென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநிலச்செயற்குழு உறுப்பினர் ந.பெரியசாமி, தென்சென்னை மாவட்டம் மதுரவாயல் பகுதியில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், விசிக கருத்தியல் பரப்புச்செயலாளர் சிபிசந்திரன், மயிலாப்பூரில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, பெரம்பூரில் சிபிஐ மாநில துணைச் செயலாளர் மூ.வீரபாண்டியன், திருவொற்றியூரில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.