tamilnadu

img

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயம்

சென்னை, பிப்.4-
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரிகளில் வசூலிக்கும் கல்விக்கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 57 நாட்களாக பல்வேறு  போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைதொடர்து, உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, இனி சுகாதாரத் துறையின் கீழ் மாற்றப்பட்டு, கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியாக செயல்படும் என்று தமிழக அரசு ஜனவரி 27ஆம் தேதி அன்று அரசாணை வெளியிட்டது.

ஆனாலும், கல்வி கட்டணம் தொடர்பான முடிவுகள் கூறப்படவில்லை. எனவே, தெளிவான விளக்கம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, தற்போது ஆண்டுக் கட்டணமாக எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூ.13,610, பி.டி.எஸ் படிப்புக்கு ரூ.11,610 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
எம்.டி, எம்.எஸ், எம்.டி.எஸ் படிப்புகளுக்கான டியூசன் கட்டணத்தை ரூ.30 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது. முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூ. 20 ஆயிரம் எனவும், பி.எஸ்.சி நர்சிங் டியூசன் கட்டணம் ரூ.3 ஆயிரம் எனவும், எம்.எஸ்.சி நர்சிங் டியூசன் கட்டணம் ரூ.5 ஆயிரம் எனவும் அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.