பா.ஜ.க.வின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதார வளர்ச்சி சரிந்தே வந்துள்ளது. நிதிப்பற்றாக்குறையும், வேலையின்மையும், விலைவாசியும் அதிகரித்தே வந்துள்ளன. விவசாயமும், தொழில்துறையும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டாவது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல் நிதிநிலை அறிக்கை பொருளாதார வளர்ச்சியை மேமம்படுத்தும் வகையிலோ, விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியை வளர்த்தெடுக்கும் வகையிலோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலோ அமையவில்லை. தனியார்மயத்தை பெருமளவு ஊக்குவிக்கும் வகையிலும், இந்தியப் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கையையும் மேலும் சீரழிக்கும் வகையிலும் - மோடி அரசு நிதிநிலைஅறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
விவசாயக் கடன்களை ரத்து செய்வது பற்றியோ, கொள்முதல் விலையை அதிகரிப்பதுபற்றியோ எவ்வித நிவாரணமும் இந்த நிநிதிநிலை அறிக்கையில் இல்லை.60 வயதுக்கு மேற்பட்ட சிறு,குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத்திட்டம்அறிமுகப்படுத்தப்படும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நாடாளுமன்ற தேர்தல் காலத்துவாக்குறுதிகள் நிறைவேற்றம் குறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவுமில்லை.
கிராமப்புற வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு எவ்வித கூடுதல் நிதி ஒதுக்கீடோ அல்லது வேலைநாட்களை கூடுதலாக்குவது மற்றும் கூலியை உயர்த்தி தருவது பற்றியோ எவ்வித அறிவிப்பும் செய்யப்படவில்லை. இதுகிராமப்புற மக்களை பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது குறித்து எவ்வித புதிய அறிவிப்பும் இல்லாததுஇளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்கும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கையில்காப்பீட்டுத்துறையில 100 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, விமானத் துறையில் கூடுதல் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது, பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்று பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையை சரிக்கட்டுவது போன்ற தவறான அம்சங்கள் இந்திய பொருளாதாரத்தில் மேலும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். மேலும் பொதுத்துறை நிறுவனங்களின்பங்குகளை 51 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும்படி செய்வது சமூக நீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டுப் பணி மறுக்கப்படும் நிலையை உருவாக்கும்.
பெட்ரோல் - டீசல் மீது சாலை மேம்பாட்டிற்காக கூடுதலாக ரூ.1 வரி விதித்துள்ளது சாதாரண, ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும், அத்தியாவசியப்பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். ஜிஎஸ்டி வரிவிதிப்புத்திட்டம் எளிமைப்படுத்தப்படும், 75 புதிய மருத்துவக்கல்லூரிகள், ஒன்றரை லட்சம் சுகாதாரமையங்கள் உருவாக்கப்படும், சில்லரை வணிகத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பன போன்ற நாடாளுமன்றதேர்தல்கால வாக்குறுதிகள் குறித்து நிதிநிலை அறிக்கையில் குறிப்பான அறிவிப்புகள் எதுவுமில்லை. மாதாந்திர வருமானம் பெறுபவர்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் சலுகைகள் ஏதுமில்லை. அதே சமயம், 250 கோடி ரூபாய் வரை வர்த்தகமுள்ள (Turn Over) கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள்ள 25 சதவிகித வருமான வரி என்பது தற்போது 400 கோடி ரூபாய் வரை வர்த்தகமுள்ள நிறுவனங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதுகார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையாகும். தமிழகத்திற்கான புதிய ரயில்கள் மற்றும் ரயில் வழிப்பாதைகள், கோதாவரி - காவிரிஇணைப்பு திட்டம், கஜா புயல், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணஉதவி ஒதுக்கீடு ஏதும் அறிவிக்கப்படாததது தமிழகத்தை வஞ்சிப்பதாகும்.
மொத்தத்தில் பாஜக அரசு சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு நிவாரணம் எதையும் இந்த நிதிநிலை அறிக்கையில் வழங்கவில்லை என்பது மட்டுமல்ல, விவசாயம் மற்றும் தொழில்துறையை வளர்த்தெடுக்கவோ, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கவோ உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை. மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை என்பதே நிதர்சனமான உண்மையாகுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலசெயற்குழு கருதுகிறது.