tamilnadu

img

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை துவங்கக்கோரி பிப். 12 ல் பேரணி.... மதுரையில் வாலிபர் சங்கம் நடத்துகிறது....

சென்னை:
மதுரையில எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை தொடங்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மதுரையில் வரும் பிப்.12ஆம் தேதி பேரணி நடைபெறவுள்ளது.சங்கத்தின் தென் மாவட்டங்களின் தலைவர்கள், செயலாளர் கள் கூட்டம் மதுரையில் மாநிலத்தலைவர் என்.ரெஜீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாநிலப் பொருளாளர் தீபா, மாநில நிர்வாகிகள் பாலசந்திரபோஸ், கோபிநாத், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உள் ளிட்டு தென்மாவட்டத் தலைவர், செயலாளர்கள் கலந்துகொண்டனர்.  

இந்தக் கூட்டத்தில்  நிறைவேற் றப்பட்ட தீர்மானம் வருமாறு:தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை துவங்கவேண்டும் என 1999ம் ஆண்டு முதல் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன் னாள் தலைவர்களில் ஒருவரான பி.மோகன் அவர்கள் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டது முதல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை துவங்கிட வேண்டுமென நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.  இத்தகைய தொடர் நிர்பந்தத்தின் விளைவாக 2015ம் ஆண்டு பட்ஜெட் உரையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை துவங் கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

2018ம் ஆண்டு மதுரை, செங் கல்பட்டு, தஞ்சாவூர், புதுக் கோட்டை, பெருந்துறை, திருச்சி என எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தமிழக அரசு  பரிந்துரைத்த இடங்களை பார்வையிட்ட மத்திய அரசு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கலாம் என்று முடிவு செய்தது. இதற்கென 262 ஏக்கர் நிலத்தை ஒதுக்குவதாக தமிழக அரசு அறிவித்தது. தொடர்ந்து 2019 ஜனவரி 27 அன்று  பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இரண்டு ஆண்டுகளில் பணிகள் நிறைவு பெறும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தன. ஆனால், அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஆரம்பகட்டப் பணிகளைக் கூட மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்ற அதிர்ச்சிகரமான செய்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிவந்துள்ளது. 2015ல் தமிழகத்தோடு சேர்த்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக அறிவிக்கப்பட்ட பல மாநிலங்களிலும், 2015க்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட பல மாநிலங்களிலும் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு செயல்படத் துவங்கியுள்ளன. தமிழகத்தை, தமிழர்களை புறக்கணிக்கும் மத்திய அரசின் இத்தகைய பாரபட்சமான நடவடிக்கையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருவதுடன், தமிழகத்திற்கு துரோகமிழைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்குத் துணைபோகும் தமிழக அரசு, தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை உடனடியாகத் துவங்கிட மத்திய அரசிற்கு நிர்பந்தம் கொடுக்கவேண்டுமென  இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது.இக்கோரிக்கையை வலியுறுத்தி 2021 பிப்ரவரி 12 அன்று மதுரை மாநகரில் பிரம்மாண்டப் பேரணியை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. முன்னதாக பிப்ரவரி 7 அன்று 100 மையங்களில் பிரச்சார இயக்கம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.