சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் சில மாவட்டங்களில் நடத்த முடியவில்லை என்பதால் அங்கு தனி அதிகாரிகளின் பதவிக்காலம் ஆறுமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உச்சநீதிமன்றம் 2019-ம் ஆண்டு டிசம்பர் 6 மற்றும் 11-ந் தேதியிட்ட ஆணையைத் தொடர்ந்து மறுசீரமைக்கப்பட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப் பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகியவற்றிலுள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளின் எல்லைவரையறை பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்காக, வாக்காளர் பட்டியல் தயாரித்தல் போன்ற முன்னேற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.இதற்கிடையில், திடீரென்று கொரோனா தொற்று நோய் பரவி வருவதால், மத்திய, மாநில அரசுகளால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு எந்திரம் போர்கால அடிப்படையில் கொரானா நோய் தடுப்பு பணிகள், பாதுகாப்பு பணிகள், மீட்பு மற்றும் நலவாழ்வு பணிகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.
எனவே, உச்சநீதிமன்றம் பல உத்தரவிட்டபடி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றின் தனி அலுவலர்களின் பதவிக் காலமானது இந்த ஆண்டு ஜூன் 30-ந் தேதியன்று முடிவடைந்தது. தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை வரும் டிசம்பர் 31-ந் தேதி வரை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதற்காக, பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் தொடர்புடைய சட்டங்களை திருத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.அதற்கேற்ற வகையில் முதல்-அமைச்சரின் பரிந்துரையின் பேரில், தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் (மூன்றாம் திருத்த) அவசரச் சட்டத்தை ஜூன் 30-ந் தேதி பிறப்பித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.