tamilnadu

img

சிறப்பு அனுமதி சீட்டு  கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை:
அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி சீட்டினை ஜூன் 30ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் பரவலை தடுக்க, மத்திய அரசு ஐந்தாம் கட்ட நடவடிக்கையாக ஊரடங்கை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்தது. தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் தொற்று அதி தீவிரமாக பரவி வருகிறது.தினமும் 500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய நிறுவனங்களுக்கும் தனிநபருக்கும் மாநகராட்சி சார்பில் சிறப்பு அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.

இந்த அனுமதிச்சீட்டு இணையதளத்தின் வழியாகவும், நேரடியாகவும் வழங்கப்பட்டு வந்தது. இந்த அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை செல்லும் என மாநகராட்சி அறிவித்தது. அடுத்தபடியாக ஊரடங்கு அடுத்த கட்டத்துக்கு சென்றதால் மே 31 ஆம் தேதி வரை அந்த அனுமதிச்சீட்டு நீட்டிக்கப்பட்டது.இந்த நிலையில், ஊரடங்கு வரும் 30 வரை அமலில் இருக்கும் என்று மத்திய, மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏற்கனவே பெற்ற அனுமதிச் சீட்டினை ஜூன் 30-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த அனுமதிச் சீட்டு நீட்டிப்பு ஆணையினை http://covid19.chennaicorporation.gov.in/c19/ என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.