சென்னை:
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு நிலவரங்களுக்கு ஏற்ப, ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.அந்த வகையில், கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், கட்டுப் பாடுகளை நீட்டிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தற்போதுள்ள கொரோனா நிலவரம், பள்ளிக் கூடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், விநாயகர் சதுர்த்தி விழா உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்கள் வருவதாலும், 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாலும் கொரோனாவை மேலும் கட்டுப்படுத்த தடுப்பூசியை அதிகளவுக்கு போடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஒன்றிய அரசு இந்த மாதம் 30 ஆம் தேதி வரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் 15 ஆம் தேதி வரை உள் ளது. இந்த கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது.இந்நிலையில், தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31 ஆம் தேதி வரை முதல்வர் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவிழா, அரசியல், சமூகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31 ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.பொது போக்குவரத்தை அவசியத்திற்காக மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். பள்ளி, கல்லூரி வளாகங்களில் நோய் தடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.