கண்ணீர்விட்ட தாய்
இதயம் உள்ளவர்கள் தூங்க முடியாது. கொரோனா தொற்று காரணமாக மார்ச் 24-ல் தொடங்கி கடந்த 70 நாட்களாக அழுகுரல்களை காதில் கேட்க முடியவில்லை. எங்களோடு நெருக்கமாக இருக்கும் ஒரு பையன், அவனோடு பிறந்தவன் ஒருவன். அம்மா இருக்கிறார். அப்பா ஒரு குடிகாரன், வீட்டை விட்டு போய்விட்டார். சகோதரனுக்கு வேலை இல்லை. அந்த ஒரு பையன் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்றால்தான் வீட்டில் அடுப்பு எரியும். இந்த 70 நாட்க ளில் அந்த 22வயது இளைஞன் பாடும்பாடு சொல்லி மாளாது. முதல் கட்டமாக 800 ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளி கைப்பொருட்களை வாங்கிக் கொடுத்தேன். அரசு கொடுத்த 1000 ரூபாய் பணத்தையும், ரேஷன் அரிசியையும் வைத்துக் கொண்டு மாயமந்திரத்தால் கூட குடும்பம் நடத்த முடியாது. அந்தபையனின் தாயர் ஒருநாள் போன் மூலம் வேதனையோடு எங்களால் இந்த நிலைமையோடு வாழ்க்கையை நடத்த முடியவில்லை.
வளர்ந்த பிள்ளைகளை பட்டினி போட முடியவில்லை. என்னால் இந்த கொடுமைகளை பார்க்க முடிய வில்லை. செத்துவிடலாம் என்று தோன்று கிறது என்று அழுகிறார். அந்த குடும்பத்திற்கு மீண்டும் ஆறு கிலோ கோதுமை மாவு, ஒரு கிலோ எண்ணை வாங்கிக் கொடுத்தேன். இதுவும் அவர்களை பாதுகாக்க போதுமான தல்ல. இருப்பினும் நம்மால் முடிந்தது. ஒரு ஆட்டோ ஓட்டுநர் 350 பேருக்கு தலைவர். ஆட்டோ ஓட்டிதான் அந்த 350 பேரும் குடும்பத்திற்கு சோறு போட வேண்டும். ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே ஐடி நிறுவனங்கள் மூடிய காரணத்தால் வாழ்க்கையே நாசமாகிவிட்டது.நொய்யரிசி யவது வாங்கிக் கொடுங்கள் என்று கண் கலங்கி நின்றார். வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு கணவர் இல்லை. அப்பா, நான்கு குழந்தை களோடு இருக்கிறார். நான்கு நாட்களாக பட்டினி. சர்க்கரை, டீத்தூளாவது வாங்கிக் கொடுங்கள். கருப்பு டீ-யாவது குடிக்கிறோம் என்று கேட்கிறார். கட்டுமான தொழிலாளி, எனக்கு கடன் வாங்கி கொடுங்கள் இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்கிறார்.இப்படி அன்றாடம் போன் வந்தவண்ணம் இருந்தது.
நாங்கள் நண்பர்கள் ஒன்று சேர்ந்தோம். எங்களோடு 50 நண்பர்கள் இணைந்தார்கள. இதில் பெரும்பாலானோர் வயதானவர்கள், பெண்கள், ஓய்வு பெற்றவர்கள். அவர்களி டம் 500, 1000 ரூபாய் என்று உதவி பெற்று, ஏழை ஆட்டோ ஓட்டுநர்கள், நரிக்குறவர்கள், கால் டாக்ஸி ஓட்டுனர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வட மாநில தொழிலாளர்கள் என 1200 பேருக்கு உதவி செய்து இருக்கிறோம். வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகள் சென்னையின் சிலிக்கான் நகரமாக மாறி வருகின்றன. இப்பகுதியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள், பெரிய பெரிய வணிக வளாகங்கள், துணிக்கடைகள், நகைக் கடைகள் என பெருகி வளர்ந்து வருகின்றன.
பறக்கும் ரயிலை தொடர்ந்து மெட்ரோ ரயில் வரவிருக்கிறது. இந்தப்பகுதிகளில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் செல்ல பேருந்துகள், ஆட்டோ,ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன. இதனால் வசதியானவர்கள் வாழும் அடுக்குமாடி குடி யிருப்புகள் பெருகிக் கொண்டே செல்கின் றன. குடிசை கிராமங்கள் என்பது மாறி, மிக உயர்ந்த மாடிவீடு கிராமங்களாக இந்த பகுதி மாறி வருகிறது. சென்னை நகரின் மையப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களை இந்தப்பகுதி களில் மறுகுடியமர்வு செய்கிறது. எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக் காமல், வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளை செய்யாமல், கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் குவித்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள சூழ்நிலை யால் இந்த மக்கள் குறைந்தபட்ச வருமானம் கூட ஈட்ட முடியாதவர்களாக மாற்றப்படு கின்றனர்.
முறைசாரா தொழிலாளர்களின் அவலம்
கட்டுமானம், ஆட்டோ ஓட்டுநர், வீட்டு வேலை செய்வார்கள் என உத்தரவாதமற்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். மேற்கண்ட நிறுவனங்களை நம்பியே இவர்களின் வாழ்க்கை உள்ளது. தற்போது ஐடி நிறுவ னங்கள், மால்கள், துணிக்கடைகள் மூடப் பட்டுள்ளதால் இத்தகையோரின் வாழ்வா தாரம் கேள்விக்குறியாகி உள்ளது. வெளி இடங்களில் இருந்து வந்தவர்களில் பல ருக்கு ரேஷன் கார்டுகள் இல்லை. அதனால் நலவாரியத்தில் உறுப்பினராக சேர முடியவில்லை. அரசு, நலவாரியம் மூலம் அறி வித்த நிவாரணமும் இவர்களுக்கு கிடைக்க வில்லை. நலவாரிய உறுப்பினர்களுக்கும் முழுமையாக கிடைக்கவில்லை. அரசின் நிவாரணத்தை பெற முடியாமல் பல லட்சம் முறைசாரா தொழிலாளர்கள் உள்ளனர்.
மனிதர்களாக நடத்தினாலே போதும்.....
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 13, 14, 15 ஆகியவற்றில் துப்புரவுத் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மண்டலங்களில் 4,515 தொழி லாளர்கள் உள்ளனர். இவர்களில் 945 பேர் மட்டுமே நிரந்தர தொழிலாளர்கள். மீதமுள்ள 3,570 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள். உத்தர வாதமில்லாத வருமானத்தில் பணிபுரியும் இவர்கள் கோரிக்கை வைத்தால் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இந்த பேரிடர் காலத்தி லும் பாதுகாப்பின்றி பணிபுரிகின்றனர். செல்போனில் துப்புரவு தொழிலாளிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் கூறுவதாலும், பாத பூஜை செய்வதாலும் அவர்களின் பிரச்சனை தீராது. மனிதர்களாக நடத்தப்பட வேண்டும். எனவே, துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ரூ.1000 நிவாரணம் போதாதென்று அரசுக்கே தெரியும்
ஒரு குடும்பத்தின் சாதாரணமாக வாழ்க்கைக்கு மாதம் குறைந்தபட்சம் 15 ஆயி ரம் ரூபாய் தேவை. ஆனால் அரசு கொடுத்துள்ள 1000 ரூபாய் ஒரு குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்யுமா? இந்த பொரு ளாதார நெருக்கடி பெண்களை தாக்குகி றது. இதனால் குடும்ப வன்முறை நிகழ்கிறது. இருப்பதை பகிர்ந்து கொடுத்து விட்டு பெண்கள் பட்டினி கிடக்க வேண்டிநிலை ஏற்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த வீட்டி லேயே இருக்க வேண்டும். சத்தான உணவு சாப்பிட வேண்டும் என்று அரசு அறிவுரை கூறிவிட்டு, ஆயிரம் ரூபாயும், ரேஷன் அரிசி யையும் வைத்துக் கொண்டு எப்படி சத்தான உணவு உண்பது? வீட்டு வாடகை எப்படி கொடுப்பது? அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என மக்கள் திண்டாடி வருகின்றனர். யார் என்ன கொடுப்பார்கள்? எப்போது கொடுப்பார்கள்? என்று காத்து கிடந்து, கூட்டமாக இருந்தாலும் பரவா யில்லை என்று முன்டியடித்து சென்று பொருளை வாங்குகிறார்கள். மக்களின் தேவையை அரசு அறிந்து செயல்பட வேண்டும். விதவைகள், மாற்றுத்திறனாளி கள் என்று இவர்களை பாதுகாக்க கூடு தல் முயற்சி எடுக்க வேண்டும்.
பரிசோதனை மையங்களை அதிகப்படுத்துக
சென்னை நகர மக்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து இருக்கிறோம். வறட்சி, சுனாமி, மழை வெள்ளம், புயல் என மீண்டு வந்து இருக்கிறோம். இதற்கு பலதரப்பினரின் உதவிகள்தான் காரணம். அதேபோல் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி, தொண்டு நிறுவனங்கள் அழைத்துப் பேசி உதவி, ஆலோசனைகளை பெற்று கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள், ஆட்டோ பர்மீட் வைத்துள்ளவர்கள், நலவாரிய உறுப்பினர் கள் என அனைவருக்கும் மாதம் 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மின் கட்ட ணத்தை ரத்து செய்ய வேண்டும். குடும்பத் தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். அதற்கேற்ப அருகிலேயே இடங்களை தேர்வு செய்து சிகிச்சை அளிக்கும் மையங்களையும் பரிசோதனை மையங்களையும் ஏற்படுத்த வேண்டும். இது ஒருபுறமிருக்க உழைக்கும் மக்களை பாதுகாக்க மேலும் உதவிகள் தேவைப்படுகிறது. நீங்களும் எங்களோடு சேர்ந்து செய்தால் இன்னும் பலருக்கு உதவ முடியும். அரசின் உதவி போதுமான தாக இல்லை. உயிரிழப்புகளை குறைக்க, மக்களை பாதுகாக்க ஒன்றிணைவோம்
இதற்கான கோரிக்கைகளை வலியுறுத்தி 5-6-2020 காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டர் சிக்னல் அருகே நடை பெறும் போராட்டத்திற்கு வாருங்கள். ஒன் றாக இணைவோம். குரல் கொடுப்போம்.