tamilnadu

img

மருத்துவர்களுக்கு தங்கும் விடுதிகளை ஏற்படுத்துக முதல்வருக்கு அறிவியல் இயக்கம் கடிதம்

 சென்னை,மார்ச் 28-  கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு தங்கும் விடுதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஏழை மக்களுக்கு உள்ளூரில் உள்ள அனைத்து அரசு பணியாளர்கள் மூலம் உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று முதலமைச்சருக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். சுப்ரமணி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  இன்று உலகம் எதிர்கொண்டு வரும் கொடுமையான கொரோனா நோயினை தமிழகத்தில் பரவவிடாமல் தடுப்பதற்காக தங்கள் தலைமையிலான அரசு எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வரவேற்கிறோம். பாராட்டுகிறோம். மேலும் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதார சேவைகள் மற்றும் பிற பணிகளும் சிறப்பாக தொடர்ந்து நடைபெற்று இந்தக் கடுமையான சூழலை கடந்து வெற்றிபெற கீழ்க்கண்ட பரிந்துரைகளை தங்களுக்கு கோரிக்கையாக முன்வைக்கிறோம்.

 கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று , தங்கள் குடும்பத்தினரோடு தங்கியிருந்து வருவதற்கு மனதளவில் தயாராக இல்லை என்பதை அறிகிறோம்.      எனவே பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தங்கி ஓய்வு எடுப்பதற்காக மருத்துவமனைக்கு அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அறைகளை அரசு மூலமாக எடுத்துக்கொடுத்து அவர்கள் தங்கி பணிக்கு வர ஏற்பாடு செய்ய வேண்டும்.  144 ஊரடங்கு  உத்தரவினால் அனைத்து மனித வளமும் முடக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்து தவறான வதந்திகள் பல வகையில் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் அனைத்து அரசுத்துறை பணியாளர்களையும் தாங்கள் சார்ந்திருக்கும் பகுதிகளில் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிப்பதற்கும் உரிய வழிகாட்டுதலுடன் பயன்படுத்தலாம். நகரங்களிலும் பெரிய சாலைகளிலும் ஊரடங்கு உத்தரவினை கண்காணிப்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் காவல்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கிராமங்களில் அவ்வாறான எந்த ஏற்பாடும் இல்லாததால் இன்றைய சூழலின் முக்கியத்துவத்தை உணராமல் வழக்கம்போல மக்கள் வெளியில் நடமாடுவதை பார்க்கமுடிகிறது.

இவற்றைத் தடுப்பதற்காக பல தன்னார்வ இயக்கங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து உரியமுறையில் பயன்படுத்தலாம். 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவினால் ஏழை மக்கள், தினசரி கூலிகள் அதிக அளவில் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு பாதிக்கப்பட கூடியவர்களின் விவரத்தினை உள்ளூரில் இருக்கும் அனைத்து அரசு பணியாளர்கள் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை உரிய முறையில் உடனடியாக செய்ய வேண்டும்.  21 நாட்கள் ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டில் இருத்தல் என்பது ஓர் கடினமான செயல். அத்தியாவசிய பணிகளுக்கு வெளியே வருவோர் காவல் துறையால் கண்ணியமாக  நடத்தப்பட வேண்டும். அதேபோல் வெளி சுற்றும் இளைஞர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட்ட வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும். ஏற்கனவே வயதானவர்களும் நோயாளிகளும் வழக்கமாக பெற்று வரும் மருத்துவ வசதிகள் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் இந்த பணியில் ஈடுபடும் அனைவருக்கும் போதுமான தகுதிவாய்ந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். இதனை உடனடியாக உறுதி செய்ய வேண்டும். என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.