சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு மோதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். உள்நாட்டுப் போரில் உச்சக்கட்ட கொடுமையாக நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இன்னமும் இந்த துயரம் மனிதநேயம் மிக்கவர்களின் இதயத்தை அறுக்கும் ஒன்றாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இறுதிகட்ட போரின் போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறியது. உண்மையில் இந்த எண்ணிக்கை இதை விட அதிகமாகவே இருக்கும்.
இதனிடையே இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதும் தமிழ் மக்களின் வாழ்நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக கூறமுடியாது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து இதுவரை முறையான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்தபோதும் இலங்கை அரசு இதுகுறித்து கவலை கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் நெஞ்சில் இது ஒரு முள்ளாகவே உறுத்திக் கொண்டிருக்கிறது.
தமிழ் மக்களின் நிலங்களை அவர்களிடம் ஒப்படைப்பது, அவர்கள் வீடு கட்டிக் கொள்ள அரசு உதவி, தொழில் மற்றும் விவசாயத்தில் ஈடுபட உதவி, போரினால் ஊனமுற்று முடங்கிக் கிடப்பவர்களுக்கு மறுவாழ்வு, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து ராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்வது, போரின் போது காணாமல் போனவர்கள் என்ற பெயரில் ராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டவர்களை அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பது, இலங்கையில் வசிக்கும் தமிழ்மக்கள் அனைத்து நிலைகளிலும் சமமாக நடத்தப்படுவது, அவர்களது வாழ்வாதாரத்தை புதுப்பிக்க உரிய உதவிகள் செய்வது,சிங்கள மொழிக்கு இணையாக தமிழ் மொழியும் அங்கீகரிக்கப்படுவது என்பன போன்ற நியாயமான கோரிக்கைகள் கூட இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற இலங்கை அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும். இத்தனைக்கும் மேலாக உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கை தரும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
இலங்கை தேவாலயங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு, அதைத் தொடர்ந்து நடைபெறும் மோதல்கள் என மீண்டும் பதற்றம் நிலவும் சூழ்நிலையில் அனைத்து இன, மத, மொழி சார்ந்தமக்களும் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்கான சூழல் இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.