சென்னை:
பொதுமுடக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என்றும், அனைவருக்கும் இலவச தடுப்பூசியை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழனன்று நடைபெற்ற சட்டப்பேரவை அனைத்துக் கட்சிதலைவர்கள் கூட்டத்தில் சிபிஐ(எம்) சார்பில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் வருமாறு:
தற்போது மருத்துவமனைகளில் உள்ள உள்நோயாளிகளுக்கான படுக்கைகள் முழுவதுமாக பயன்படுத்தப் பட்டுள்ள நிலையில், புதிதாக வரும் நோயாளிகளுக்கு படுக்கை அளிக்க இயலாத நிலைமை உருவாகியுள்ளது. இதனால் கூட உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இத்தகைய படுக்கைகளின் பற்றாக்குறையால் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரை வீட்டிலேயே தனிமையில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளு மாறும் சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் ஒருவர் வீட்டிலேயே இருப்பதால் அவர் மூலம் அந்த வீட்டிலுள்ள பிறருக்கும் நோய்த்தொற்று பரவும் நிலையும் உருவாகிறது. எனவே,நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அனைவரையும் மருத்துவமனைகளில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்வது மிக அவசியமானதாகும்.
அதே நேரத்தில் லேசான அறிகுறிகளுடன் சுகாதாரத் துறை வழிகாட்டிய அடிப்படையில் மருத்துவம் பெற்று வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கலாம். ஆனால் அவர்களுக்கும் கண்காணிப்பையும் சிகிச்சையையும் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கென பகுதி வாரியாகஸ்கிரீனிங் மையங்கள் செயல்படுத்த வேண்டும். வீட்டில் இருக்கும் நோயாளிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிற நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்து அவரை மருத்துவமனையில் உடனுக்குடன் சேர்க்க இந்த மையங்கள் ஏற்பாடு செய்யவேண்டும். வீட்டில் இருக்கும் நோயாளிகள் இணைய வழியில் வழிகாட்டுதல் பெறவும் ஏற்பாடு செய்திட வேண்டும்.
மருத்துவமனைகளில் தேவையானஅளவில் படுக்கைகளின் எண்ணிக்கை களை அதிகரிக்க வேண்டும், ஆக்சிஜன் படுக்கைகள், படுக்கை அனுமதிப்பிற்கு மாவட்டவாரியான ஒற்றைச்சாளர முறை கொண்டுவரப்பட வேண்டும். மேலும் பரவலான இடங்களில் தற்காலிக சிகிச்சை மையங்களையும் உருவாக்கிடவும், ஆரம்ப சுகாதார மையங்கள் அனைத்திலும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.அடுத்த பரவல் கிராமப்புறங்களில் தீவிரப்படலாம் என சுகாதாரத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, கிராமப்புறங்களில் நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.ஊரடங்கு காலத்தில் நோய் குணமானவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.கொரோனா பரிசோதனை செய்த 12 மணி நேரத்திற்குள் முடிவுகள் தெரிவிக்கப்பட வேண்டும்.
சில இடங்களில் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு 24 மணி நேரத்திற்கு மேலும் தாமதமாகிறது. இதனால் நோய்த் தொற்றாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் பரிசோதனை முடிவில் கொரோனா பாசிட்டிவ் என்றால் தான் தகவல் தரப்படுகிறது. கொரோனா நெகட்டிவ் என்றால் தகவல் வருவதில்லை. எனவே, நெகட்டிவ் என்றாலும் சம்பந்தப்பட்டவருக்கு அந்த தகவலை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் அச்சத்திலிருந்து மீள முடியும்.நோய்த்தொற்று தீவிரமாக பரவி வரும்அனைத்து மாவட்டங்களிலும் அதிகஎண்ணிக்கையிலான கொரோனா மருத்துவ முகாம்களை ஏற்படுத்துவது டன் பரவலாகவும் அமைக்கப்பட வேண்டும். மிலிட்டரி மருத்துவமனைகள் ரயில்வே மருத்துவமனைகள் போன்ற மருத்துவமனைகளையும் தமிழ்நாடு அரசு ஏற்பாட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட பொதுவான நோயாளிகள் சிகிச்சைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தனியார் மருத்துவ கல்லூரிகள்,பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்களை பயன்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட முகாம்களில் உணவு தரத்தை மேம்படுத்த வேண்டும். ஏற்கனவே இருந்தமருத்துவமுகாம்கள் அனைத்தையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு இது மட்டும்தான் வழி.சென்னை உள்ளிட்ட பெருநகரங் களில் அநேகமாக ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் காலியாக இல்லை. ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் பல மணி நேரமாக முயற்சித்தாலும்கூட மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சைபெற முடியவில்லை. கொரோனா நோயாளிகளில் மிகப்பெரும்பாலா னோருக்கு ஆக்சிஜன் தேவைப்படுவ தால், அனைத்து படுக்கைகளிலும் ஆக்சிஜன் வசதிகளோடு கூடிய சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும், தற்போதைய தேவையை விட வரும் நாட்களில் ஆக்சிஜனுக்கான தேவை அதிகரிக்கும் சூழல் இருப்பதால் அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான அளவிற்கு ஆக்சிஜன்இருப்பை உத்தரவாதம் செய்யவேண்டும்.
மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்குகூடுதலாக ஆக்சிஜனை கேட்டுப்பெற்றி டவும், தமிழகத்தில் திருச்சி பெல், நெய்வேலி என்எல்சி போன்ற இடங்களில் ஆக்சிஜனை உற்பத்தி செய்திடவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்திட கேட்டுக்கொள்கிறோம். தற்போது என்.எல்.சி. நிறுவனத்தில் அதற்கான பணியை துவக்கியுள்ளதாகஅறிகிறோம்.செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல். நிறுவனத்தில் தேவையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய அனைத்து கட்டமைப்பு வசதிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் உள்ள நிலையில் அங்கே உடனடியாக தடுப்பூசி உற்பத்தியை துவங்க மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு தமிழகத்தில் கடுமையான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பிற்கு பிறகு தற்போது சென்னையுடன் மதுரை,கோவை, நெல்லை, திருச்சி, சேலம்போன்ற மாவட்ட மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இது போதுமானதல்ல.சென்னையில் தொற்று பரவல்மிக அதிக மான உள்ளதால், சென்னையில் பல இடங்களிலும், அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்துகள் கிடைக்கஏற்பாடு செய்ய வேண்டும்.
தனியார் மருத்துவமனை கட்டணத்தை முறைப்படுத்துக!
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பல தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சைக்கான கட்டணமாக பல லட்சம் வரையிலும் வசூலிக்கப்படுகிறது. ஒரு ரெம்டெசிவிர் ஊசிக்கு ரூபாய் முப்பதாயிரம் வரையிலும், 2 லிட்டர் ஆக்சிஜன் விலை ரூ. 20,000- வரையிலும், ஒரு நாள் சிகிச்சைக்கும் ரூபாய் ஐம்பதாயிரம் வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் உறுதியாக தலையிட்டு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை செய்வதற்கான கட்டண விகிதங்களை முறைப்படுத்தவேண்டுமென வும், தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
முதலமைச்சரின் காப்பீட்டிற்கான வருமான வரம்பு ஆண்டுக்கு ரூ.72,000/- என்று இருப்பதை உயர்த்த வேண்டும். முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் பொருந்தக்கூடிய நோயாளிகளிடம் பணம் செலுத்த தனியார் மருத்துவமனைகள் நிர்ப்பந்தம் செய்கின்றன. இத்தகைய மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடுப்பூசி வாங்க தமிழக அரசு, உலகளாவிய டெண்டர் விடுவது நல்லது. இருப்பினும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்பது மத்திய அரசினுடைய கடமை என்கிற அடிப்படையில் அதை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட அனவருக்கும் உடனடியாக இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படவேண்டும். தேவையான அளவிற்கு தடுப்பூசிகளை விரைந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தட்டுப்பாடின்றி அனைவருக்கும் தடுப்பூசிகிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். தடுப்பூசி செலுத்துவதற்கு ஒரு காலவரையறை நிர்ணயிக்கப்பட வேண்டும். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.ரெம்டெசிவிர் விற்பனை மற்றும் கொரோனா தடுப்பூசி போடுவதை மருத்துவமனை அல்லாத பிற பகுதிகளுக்கு மாற்றிட வேண்டும்.
நியமனம் செய்திடுக!
தற்போது தமிழகத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கான கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேவையான எண்ணிக்கையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ செவிலியர்கள், பணியாளர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தை புதிதாக நியமிக்கப்படுபவர்களுக்கும் வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை யும் எடுத்திட வேண்டும்.கோவிட் வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றும் போது அவர்களுக்கான தரமான உணவு மற்றும் தங்கும் இடத்தை உத்தர வாதப்படுத்த வேண்டும்.
நிவாரணத் தொகையை அதிகரித்திடுக!
தமிழக அரசின் பொதுமுடக்க அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4,000 வழங்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறோம். இதுபோதுமானதல்ல; தினக்கூலி தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்சி ஒட்டுநர்கள், வணிக வளாகங்கள், கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், சுற்றுலாதொழில், முடிதிருத்தும் தொழிலாளர்கள்,உணவகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், நாடகம், கூத்து உள்ளிட்ட கிராமிய கலைஞர்கள், இசைக்கலை ஞர்கள், திரையரங்க தொழிலாளர்கள் ‘பிச்சாவரம் படகு தொழிலாளிகள் போல சுற்றுலாத்தலங்களில் பணியாற்றுபவர்கள்’ உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசின் பொதுமுடக்க அறிவிப்பால் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள அனைவருக்கும் நிவாரண உதவியாக மாதம்தோறும் ரூ.7500/- உடனடியாக வழங்க வேண்டும்.
பொதுமுடக்கத்தால் பொதுமக்கள் தங்கள் வருமானம் இழந்துள்ளதால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஒரு மாத வாடகையிலிருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல வங்கி கடன்கள், நுண் நிதி நிறுவனங்களின் கடன்கள், தனியார் நிதி நிறுவனங்களின் கடன்கள், கிரிடிட் கார்டு கடன்கள் உள்ளிட்டு அனைத்து மாதாந்திர கடன் தவணைகளையும் நிலைமை சீராகும் வரை வசூலிப்பதிலிருந்து விலக்களிக்க வேண்டும். மேலும் குடும்ப வன்முறை இந்த காலகட்டத்தில் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாத்திட ஹெல்ப் லைன் அமைத்து மக்கள் மத்தியில் அந்த செய்தியை கொண்டு செல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளாட்சி அமைப்புகளை ஈடுபடுத்துக!
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதால் உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு பல மணி நேரங்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தகனமேடைகள் அதிகப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடும்பங்களுக்கு நிவாரணம்
குறிப்பிட்ட சில குடும்பங்களில் நடுத்தர வயதைச் சார்ந்தவர்கள் கொரோனாதொற்றின் காரணமாக இறந்துவிடு கின்றனர். அப்படி இறந்துவிட்டவர்களின் வருமானத்தை நம்பித்தான் அந்த குடும்பம் வாழ்ந்து வந்துள்ளது. தற்பொழுது அந்த குடும்பங்கள் நிர்க்கதியாக நிற்கின்றன. அவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.நியாய விலைக்கடைகளில் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்கும் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல்
முகக்கவசங்கள் வழங்கப்பட வேண்டும். ரேசன் கடைகளில் தற்போது வழங்கப்படும் அரிசி, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியபொருட்களோடு பல்வேறு அத்தியாவசிய பொருட்களையும் ஒரு சில மாதங்களுக்கு இலவசமாக வழங்கிட கேட்டுக் கொள்கிறோம். பல தன்னார்வ அமைப்புகள் கொரோனா சிகிச்சைக்கு உதவியாக தன்னார்வத் தொண்டர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அவர்களை மாவட்ட நிர்வாகங்களும் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சுமார் 1000 தன்னார்வத் தொண்டர்களுக்கு மருத்துவரீதியாக இந்த நிபுணர்களைக் கொண்டு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்குகின்றனர். இதுபோன்று பல அமைப்புகளில் இருந்து தன்னார்வத் தொண்டர்களை ஊக்கப்படுத்தி பயன்படுத்த வேண்டும்.
கொரோனா தொற்றல் பாதிக்கப்படுபவர்களை மீட்டெடுத்து இரவும் பகலுமாக காப்பகத்தில் வைத்து பாதுகாத்து வரும் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் நகர்ப்புற வீடற்றோர்களுக்கான காப்பக பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து அவர்களுக்கு ஊக்கத் தொகை அளித்து பணி நிரந்தரம் செய்திட வேண்டும். பல நகராட்சியில் உள்ள அரசு மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையங்களாக உள்ளன. ஆனால் இந்த மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், ஆக்சிஜன் வசதி இல்லாத சூழ்நிலை உள்ளது. நகராட்சிகளில் செயல்படும் கொரோனா மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி தொகுப்பு 1 மற்றும் 4 என 2 பக்கமாக பிரிக்கப்பட்டுள்ளது. தோழர்கள் தொடர்ந்து படிக்கும் வசதிக்காக ஒரே தொகுப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.