வானில் தோன்றும் வண்ண ஒளிக்கீற்றுகள் குடும்பத்துடன் ரசிக்க இரவு ரயில் பயணம்
நார்த்தன் லைட்ஸ் என சொல்லப்படும் இரவு நேரத்தில் வானில் தோன்றும் வண்ண ஒளி கீற்றுகளான துருவ ஒளி புகழ்பெற்ற ஒரு இயற்கை அதிசயமாக உள்ளது.இது சூரியத் துகள்களால் இந்த ஒளிக்கீற்றுகள் உருவாகின்றன.
அதாவது சூரியனிலிருந்து வரும் மின்னூட்டம் பெற்ற துகள்கள் பூமியின் காந்தப்புலத்துடன் மோதும் போது, வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜனுடன் வினைபுரிந்து வண்ணமயமான ஒளியை உருவாக்குகின்றன.இது பச்சை, இளஞ்சிவப்பு, ஊதா போன்ற பல வண்ணங்களில் வானில் திரைச்சீலைகள், கதிர்கள் அல்லது சுருள்கள் போலத் தோன்றும் ஒரு கண்கவர் நிகழ்வாக இருக்கும். பெரும்பாலும் இது ஆர்க்டிக் பகுதியில் இரவு நேரத்தில் உருவாகும் இந்த ஒளிக்கீற்றுகளை காதலர்களும், குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுடன் குடும்பத்தினர் கண்டு ரசிக்கும் முக்கியமான மனதை மகிழ்விக்கும் இயற்கையான பொழுது போக்கு நிகழ்வாக உள்ளது. தற்போது இந்த நிகழ்வை குடும்பத்துடனும் நபர்களுடனும் பாதுகாப்பாக கண்டு ரசிக்க முதல் முறையாக நார்வே நாட்டில் இரவு நேர ‘பனோரமிக்’ ரயில் பயணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிட்நைட் அரோரா ரூட்” (Midnight Aurora Route) என்று அழைக்கப்படும் இந்த ரயில் பயணம், ஆடம்பரமாகவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தொழில்நுட்பத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பயணிகள் ரயிலாக இல்லாமல் சுற்றுலா ரயிலாக இருக்கும். இந்த ரயிலின் மேற்கூரை, பக்கவாட்டு பகுதிகள் அனைத்தும் கண்ணாடியால் ஆனவை. இதனால் பயணிகள் ரயிலுக்குள் இருந்தபடியே வான்வெளியில் தோன்றும் வண்ணமயமான ஒளிகளைத் தடையின்றி ரசிக்க முடியும். பயணிகள் வானத்தை நோக்கிப் பார்க்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சாய்வு இருக்கைகள் அந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ளன. குளிர் காலம் நிலவி வரும் நிலையில் கடும் குளிரையும் தாங்கும் வகையில் வெப்ப வசதியுடன் (Climate-controlled) இந்த ரயிலின் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே உள்ள நார்விக் ரயில் நிலையத்திலிருந்து துவங்கி பனி படர்ந்த மலைகள் மற்றும் அழகிய நீர்நிலைகள் வழியாக நீண்ட தூரம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணத்தின் இடையில் இரு இடங்களில் மட்டுமே அந்த ரயில் நிறுத்தப்படும். அங்கு பயணிகள் ரயிலை விட்டு இறங்கி, திறந்தவெளியில் நெருப்பு மூட்டி (Bonfire), சூடான பானங்களுடன் தங்கள் விடுமுறையை மகிழ்ச்சியுடன் தமது நண்பர்களுடன் கொண்டாடலாம். கொண்டாட்டங்களுக்கு இடையே ரயிலில் பயணிக்கும் வழிகாட்டிகள் இந்த துருவ ஒளி உருவாவதன் பின்னணியில் உள்ள அறிவியலை விளக்குவார்கள் எனவும் மேலும் டிஜிட்டல் திரைகளில் மூலம் மேகமூட்டம் மற்றும் புவி காந்தச் செயல்பாடுகள் குறித்த நேரடித் அறிவியல் தகவல்களும் பயணிகளுக்கு காட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருவ ஒளிகள் மிகத் தெளிவாகத் தோன்றும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மட்டுமே இந்தச் சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிக்க ஒரு நபருக்கான பயணக் கட்டணம் சுமார் 130 யூரோ அதாவது இந்திய மதிப்பில் சுமார் 13,750 ரூபாயாகும். இந்தச் சிறப்புப் பயணத்திற்கான இடங்கள் மிக விரைவாக நிரம்பி விடுவதால், ‘Norwegian Travel - Northern Lights Train’ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளபரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
